» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெங்களூருவில் ஒரே இரவில் 100 மி.மீ கனமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு!

திங்கள் 19, மே 2025 5:48:34 PM (IST)



பெங்களூருவில் ஒரே நாள் இரவில் பெய்த 100 மி.மீ கனமழையால் நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பெங்களூருவுக்கு மே 23 வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையையும், தட்சிண கன்னடம், உடுப்பி, உத்தர கன்னடம், ஹாவேரி, பெலகாவி ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது

இந்த மழை காரணமாக ஹோராமாவுவில் உள்ள ஸ்ரீ சாய் லேஅவுட் மற்றும் ரெயின்போ டிரைவ் லேஅவுட் ஆகிய இடங்களில் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்தது. சாய் லேஅவுட்டில் உள்ள வீடுகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற மக்கள் போராடி வருகின்றனர், மேலும் ரெயின்போ டிரைவ் லேஅவுட்டில், சில சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த கனமழை காரணமாக சாலைகள், பேருந்து நிலையங்கள், குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். கனமழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்தை சந்தித்தனர். கோரமங்கலா, இந்திராநகர், சில்க் போர்டு சந்திப்புகள், எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம் மற்றும் பிற பகுதிகளில் அதிகாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தண்ணீர் தேங்கியதால் இன்று காலை நேரத்தில் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம் மூடப்பட்டது. ஹெச்ஆர்பிஆர் லேஅவுட், மத்திய வணிக மாவட்டம் (சிபிடி), ஜேபி நகர், வைட்ஃபீல்ட், சர்ஜாபுரா ஆகிய இடங்களில் பல சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. ஹோரமாவுவில் உள்ள ஸ்ரீ சாய் லேஅவுட்டிற்கு மீட்புக் குழுக்கள் படகுகளுடன் வந்துள்ளன.

அதேபோல பன்னேர்கட்டா சாலை மற்றும் பிற சாலைகளிலும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாந்திநகர் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியும் இதனால் வெள்ளத்தில் மூழ்கியது. பல இடங்களில் பலத்த காற்றின் காரணமாக கிளைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் சாலைகள் தடைபட்டு வாகனங்கள் சேதமடைந்தன. இப்பகுதியில் வீடுகள் மற்றும் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக ஹோரமவுவில் உள்ள ஸ்ரீ சாய் லேஅவுட்டில், குடியிருப்பாளர்களை மீட்க மாநகராட்சி நிர்வாகம் ஒரு பேரிடர் மேலாண்மை குழுவை அனுப்பியது.

ரெயின்போ டிரைவ் லேஅவுட்டுக்குள் உள்ள சாலைகளிலும் தண்ணீர் புகுந்தது. கனமழை மற்றும் பலத்த காற்றில் கம்பங்கள் சாய்ந்து, டிரான்ஸ்மிஷன் கேபிள்கள் உடைந்ததால் நகரத்தின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. யெலஹங்கா, ஹென்னூர், சிங்கசந்திரா, சிவாஜிநகர், கஸ்தூரி நகர், பனஸ்வாடி, பிடிஎம் லேஅவுட், முன்னேகொல்லால் மற்றும் மத்திகெரே போன்ற பல பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் அதிகாலை வரை மின்சாரம் தடைபட்டது. இதனால் தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்யவும், மின்சாரம் மற்றும் தண்ணீர் சேவையை மீட்டெடுக்கவும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெள்ளிக்கிழமை வரை பெங்களூருக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுத்துள்ளது. இது நகரம் முழுவதும் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory