» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தீ விபத்தில் 8 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் பலி: ஹைதராபாத்தில் சோகம்

ஞாயிறு 18, மே 2025 9:25:13 PM (IST)



ஹைதராபாத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8  குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர். 

ஹைதராபாத் நகரில் உலகப் புகழ்பெற்ற சார்மினார் அருகே உள்ள குல்சார் ஹவுஸ் கட்டடத்தில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாக தெலங்கானா தீயணைப்புத்துறை டிஜிபி நாகி ரெட்டி அறிவித்தார். மின் கசிவு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கட்டிடத்தில் வெளியேறுவதற்கு 2 மீட்டர் அகலத்தில் குகை போல ஒரு பகுதி மட்டுமே இருந்தது. முதல் மற்றும் இரண்டாவது தளத்துக்குச் செல்வதற்கு ஒரு மீட்டர் அகல படிக்கட்டுகள் மட்டுமே உள்ளன. இவையெல்லாம் விபத்தின் போது வெளியேறுவதையும் மீட்புப் பணிகளையும் சிரமத்துக்குள்ளாக்கியது. கட்டிடத்தில் 21 பேர் இருந்தனர். அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் மூச்சித்திணறியே உயிரிழந்துள்ளனர். யாருடைய உடலிலும் தீ காயங்கள் இல்லை" என்று தெரிவித்தார்.

முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல்: 

பழைய ஹைதராபாத் நகரின் குல்சார் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும், காயம்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றி சிறப்பான சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தீ விபத்து சம்பவம் குறித்து அமைச்சர் பொன்னம் பிரபாகரிடம் பேசி விவரங்களை அறிந்து கொண்ட முதல்வர், மீட்புப் பணிகளை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டார். மேலும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீட்பு பணிகளுக்காக எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, தனது இரங்கலை தெரிவித்தார். மேலும் அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உறுதியளித்தார்.

ரூ.5 லட்சம் நிவாரணம் - துணைமுதல்வர்: 

குல்சார் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று தெலங்கானா துணைமுதல்வர் பட்டி விக்ரமார்க மல்லு அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய துணைமுதல்வர், "முதல்கட்ட தகவலின் படி, மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் காயம் அடைந்தவர்களின் மருத்துவச் செலவினை அரசு ஏற்றுக்கொள்ளும். மின்கசிவு அல்லது கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். முதல்வர் ரேவந்த் ரெட்டி நிலைமையை உண்ணிப்பாக கவனித்து வருகிறார்.” என்று தெரிவித்தார்.

பிரதமர் இரங்கல்: 

முன்னதாக இன்று காலையில் குல்சார் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory