» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அக்சர் படேலின் மேஜிக் கேட்ச்கள்; இங்கிலாந்தை முடக்கிய பும்ரா - இந்திய அணி வெற்றிப் பாதை!

வெள்ளி 6, மார்ச் 2026 11:43:18 AM (IST)



ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் வீசப்பட்ட 40 ஓவர்களில் மொத்தம் 499 ரன்கள் குவிக்கப்பட்டன. பேட்டிங்கிற்கு சாதகமான இத்தகைய ‘மட்ட ரக’ ஆடுகளத்தில், பும்ராவின் பந்துவீச்சும் அக்சர் படேலின் அபாரமான கேட்ச்களுமே இந்திய வெற்றியின் அடித்தளமாக அமைந்தன.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 97 ரன்கள் விளாசிய அதே ஃபார்மைத் தொடர்ந்த சஞ்சு சாம்சன், நேற்றும் இங்கிலாந்து பந்துவீச்சைச் சிதறடித்தார். 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து இந்திய அணியின் ஸ்கோர் உயர உதவினார். ஹாரி புரூக் தன்னிடம் வந்த கேட்சைத் தவறவிட்டதைச் சாதகமாக்கிக் கொண்ட சஞ்சு, மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகளைப் பறக்கவிட்டார்.

இப்போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை அக்சர் படேல் பிடித்த அந்த இரண்டு கேட்ச்கள் தான். குறிப்பாக, அபாயகரமான வீரர் ஹாரி புரூக் கொடுத்த கடினமான கேட்ச்சை, பின்னோக்கி ஓடிச் சென்று டைவ் அடித்து அக்சர் பிடித்த விதம், 1983 உலகக் கோப்பையில் விவியன் ரிச்சர்ட்ஸிற்கு கபில் தேவ் பிடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க கேட்ச்சுடன் ஒப்பிடத்தக்கது. இந்த ஒரு கேட்ச் இங்கிலாந்தின் வெற்றி வேகத்தைத் தடுத்து நிறுத்தியது.

இங்கிலாந்து அணி அதிரடியாகத் தொடக்கத்தைத் தந்தாலும், சூர்யகுமார் தனது துருப்புச் சீட்டான பும்ராவைச் சரியான நேரத்தில் பயன்படுத்தினார். இங்கிலாந்துக்கு ஓவருக்கு 13.80 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பும்ரா தனது வேகத்தை மாற்றியும், துல்லியமான யார்க்கர்களை வீசியும் வெறும் 8 ரன்கள் மட்டுமே தந்தார்.

இதுவே போட்டியின் தலைவிதியை மாற்றியது. 94 ரன்களுடன் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ஜேக்கப் பெத்தேல் மற்றும் சாம் கரண் ஜோடியை, தனது 6 யார்க்கர் பந்துகள் மூலம் பும்ரா கட்டிப்போட்டார். அந்த ஓவரில் பவுண்டரியே கொடுக்காமல் வெறும் 6 ரன்கள் மட்டுமே வழங்கி, இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பைத் தகர்த்தார்.



ஆட்ட நாயகன் விருது பெற்ற சஞ்சு சாம்சன் பேசுகையில், "இந்த விருது பும்ராவுக்குத்தான் போயிருக்க வேண்டும். அவர் அந்த ஓவர்களை வீசவில்லை என்றால் நான் இன்று இங்கு (வெற்றி நாயகனாக) நின்று கொண்டிருக்க மாட்டேன்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கேட்சை தவற விட்டது தவறு

தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் நிருபர்களிடம் கூறியதாவது:சஞ்ச சாம்சன் 15 ரன்னில் இருந்த போது அவரது கேட்சை தவற விட்டேன். இது மிகப்பெரிய தவறாகிவிட்டது. அவர் அடித்த ஸ்கோரை (89 ரன்) நான் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். கேட்ச்களை தவற விடுவது போட்டியை பாதிக்கும்.

இந்திய வீரர்கள் பீல்டிங்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். எங்கள் அணி வீரர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பெத்தெல் கடைசி வரை போராடினார். இந்த அரைஇறுதி ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory