» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது ஹைதராபாத்!
செவ்வாய் 19, மே 2026 10:55:16 AM (IST)

நடப்பு ஐபிஎல் தொடரின் 63-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு அதிரடியாக முன்னேறியுள்ளது. ஹைதராபாத்தின் இந்த வெற்றியால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பும் உறுதியாகியுள்ளது. அதேநேரம், சென்னை அணி தொடரை விட்டு வெளியேறும் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (திங்கள்கிழமை) இரவு நடைபெற்ற இந்த ஆட்டம், நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் கடைசி லீக் ஆட்டம் என்பதால், நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனி களம் காண்பார் என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், தோனி இன்னும் முழுமையான உடற்தகுதி பெறாததால் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை என்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் போடும்போது அறிவித்தது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரராகக் களம் புகுந்த சஞ்சு சாம்சன் 27 ரன்களுக்கும், உர்வில் படேல் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கார்த்திக் சர்மா 32 ரன்களும், டெவால்டு பிரெவிஸ் அதிரடியாக 44 ரன்களும் (2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) குவித்து ரன் வேகத்தை உயர்த்தினர்.
கேப்டன் ருதுராஜ் 15 ரன்களுக்கு வெளியேறிய நிலையில், ஷிவம் துபே 26 ரன்களும், பிரசாந்த் வீர் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஓவர்கள் முடிவில் அகீல் ஹுசைன் 3 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஹைதராபாத் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், சகிப் ஹுசைன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஹைதராபாத் அணி, 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 6 ரன்களுக்கு வீழ்ந்தாலும், அபிஷேக் சர்மா 26 ரன்கள் எடுத்து அதிரடி தொடக்கம் தந்தார்.
இதையடுத்து 3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த இஷான் கிஷன் - ஹென்ரிச் கிளாசென் கூட்டணி சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 75 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய கிளாசென் 47 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் தூண் போல் நின்ற இஷான் கிஷன் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 70 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். நிதீஷ்குமார் ரெட்டி 11 ரன்களுக்கு அவுட்டானார். இறுதியில், சலில் வோரா 10 ரன்களுடனும், ரவிச்சந்திரன் ஸ்மரன் 5 ரன்களுடனும் களத்தில் இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
சென்னை தரப்பில் முகேஷ் சௌதரி 2 விக்கெட்டுகளையும், அன்ஷுல் காம்போஜ், நூர் அகமது, அகீல் ஹுசைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். சொந்த மண்ணில் சந்தித்த இந்தத் தோல்வியால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு மிகவும் சிக்கலாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: கே.எல்.ராகுல், சுப்மன் கில் அதிரடி சதம்!
சனி 6, ஜூன் 2026 5:26:51 PM (IST)

இளம் வயதில் இந்திய அணியில் இடம்பிடித்தார் சூர்யவன்ஷி : சச்சின் சாதனை முறியடிப்பு!
சனி 6, ஜூன் 2026 4:47:09 PM (IST)

இந்திய டி20 அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம் ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்!
சனி 6, ஜூன் 2026 4:41:43 PM (IST)

ஐபிஎல் 2026 சாம்பியன்: குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையைத் தக்கவைத்த ஆர்சிபி அணி!
திங்கள் 1, ஜூன் 2026 12:32:33 PM (IST)

சுப்மன் கில் அபார சதம்: ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குஜராத்!
சனி 30, மே 2026 11:20:46 AM (IST)

மாநில கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் அணி சாம்பியன்: சார் ஆட்சியர் சுழற்கோப்பையை வழங்கினார்!
வெள்ளி 29, மே 2026 8:40:23 AM (IST)


