» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அஸ்வின் 6 விக்கெட்: சென்னை டெஸ்டில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!!

திங்கள் 23, செப்டம்பர் 2024 8:37:29 AM (IST)



சென்னையில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ‘உள்ளூர் நாயகன்’ அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 376 ரன்களும், வங்காளதேசம் 149 ரன்களும் எடுத்தன. 227 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 4 விக்கெட்டுக்கு 287 ரன்களுடன் ‘டிக்ளேர்’ செய்து வங்காளதேசத்துக்கு 515 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (51 ரன்), ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் (5 ரன்) களத்தில் இருந்தார்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று வங்காளதேச பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து பேட் செய்தனர். தொடக்கத்தில் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை சமாளித்த ஷன்டோ- ஷகிப் அல்-ஹசன் கூட்டணி, அஸ்வினின் சுழல் தாக்குதலில் உடைந்தது. அவரது பந்து வீச்சில் அல்-ஹசன் (25 ரன், 56 பந்து, 3 பவுண்டரி) தடுத்து ஆட முற்பட்ட போது அருகில் நின்ற ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் ஆனார். முன்னதாக அல்-ஹசன் 17 ரன்னில் இருந்த போது ரிஷப் பண்ட்டின் தடுமாற்றத்தால் ஸ்டம்பிங் கண்டத்தில் இருந்து தப்பினாலும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறினார்.

ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று திரும்பியதால் அஸ்வின்- ஜடேஜா சுழல் ஜாலத்தில் மிரட்டினர். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் லிட்டான் தாஸ் (1 ரன்) ஜடேஜா பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ரோகித் சர்மாவிடம் பிடிபட்டார். நீண்ட நேரம் போராடிய கேப்டன் ஷன்டோ (82 ரன், 127 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) ஜடேஜா வீசிய பந்தை தூக்கியடித்த போது சரியாக ‘கிளிக்’ ஆகாத அந்த பந்தை பும்ரா கேட்ச் செய்தார். எஞ்சிய பேட்ஸ்மேன்களும் சுழலுக்கே இரையானார்கள்.

மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக வங்காளதேச அணி 2-வது இன்னிங்சில் 62.1 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஜடேஜா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அஸ்வின் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 2 ேபாட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 27-ந்தேதி கான்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றமில்லை. 16 பேர் கொண்ட அதே அணியை 2-வது டெஸ்டுக்கும் தொடரும் என்று தேர்வு குழு அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory