» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி: சட்டசபை வளாகத்தில் பரபரப்பு!

வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:58:38 PM (IST)

தமிழகச் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், தலைமைச் செயலக வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக ஏற முயன்ற சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றக் கூட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் செய்தியாளர்களுக்குத் தனித்தனியாகப் பேட்டியளித்தனர். அதன் பின்னர், தங்களது அலுவலக அறைகளுக்குச் சென்று சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஆலோசனை முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்குப் புறப்படுவதற்காகக் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்தார். அப்போது, அங்கே நிறுத்தப்பட்டிருந்த உதயநிதி ஸ்டாலினின் காரைத் தனது கார் எனத் தவறாகக் கருதி அதில் ஏற முயன்றார்.

இதைக் கவனித்த அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக, "ஐயா, நமது கார் முன்னால் நிற்கிறது; இது நமது கார் இல்லை" என்று சுட்டிக்காட்டினர். உடனே சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, முன்னால் நின்ற தனது சொந்த காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார்.

கடந்த 2022-ஆம் ஆண்டும் இதேபோலத் தலைமைச் செயலக வளாகத்தில், உதயநிதி ஸ்டாலினின் காரில் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக ஏற முயன்றது குறிப்பிடத்தக்கது. ஒரே பாணியில் இரண்டாவது முறையாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அங்கிருந்தவர்களிடையே விவாதப் பொருளானது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory