» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய 141-வது ஆண்டு திருவிழா: திருத்தேர் பவனி கோலாகலம்!

வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:18:30 PM (IST)



தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 141-ஆம் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, அன்னையின் திருத்தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்துத் தேர் இழுத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பிரசித்தி பெற்ற அதிசய பனிமாதா பேராலயத்தின் 141-வது ஆண்டுத் திருவிழா கடந்த ஜூலை 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில், விழா நாட்களில் தினமும் காலையில் திரியாத்திரை பவனி மற்றும் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன.

விழாவின் 9-ஆம் திருவிழாவான நேற்று இரவில், குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் ஜி.ஏ. அனஸ்தாஸ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை மற்றும் நற்கருணைத் திருப்பலி நடைபெற்றது.

நள்ளிரவு 12:00 மணியளவில், மின்விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அதிசய பனிமாதா அன்னையின் சொகுசுத் திருத்தேர் பவனி தொடங்கியது. இத்தேர்பவனியை பேராலயத் தர்மகர்த்தா மரியராஜ் ஆசிரியர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, அங்குத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களும் பக்தர்களும் "மரியே வாழ்க" என்ற முழக்கத்துடன் வடம்பிடித்துத் தேரை இழுத்து வழிபட்டனர். இத்திருவிழாவில் சென்னை, மும்பை, கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, நேர்த்திக்கடனாக உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றைச் சப்பரத்தின் மீது தூவி காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.

அன்னையின் திருத்தேர் பேராலயத்தைச் சுற்றியுள்ள முக்கிய ரதவீதிகள் வழியாக வலம் வந்து, அதிகாலை 5:00 மணியளவில் மீண்டும் நிலைக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து, 10-ஆம் திருவிழாவான இன்று அதிகாலை 5:15 மணிக்கு, பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீருடன் 141-வது ஆண்டுத் திருவிழா நிறைவு பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory