» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உழவர் சந்தைகளைப் புனரமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு: வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:04:54 PM (IST)
உழவர் சந்தைகளைப் புனரமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான வேளாண் வரவு-செலவுத் திட்டத்தை (வேளாண் பட்ஜெட்) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் இன்று (ஆகஸ்ட் 6) தாக்கல் செய்தார்.
விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குதல், இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துதல் மற்றும் மண்வளத்தைப் பாதுகாத்தலை முக்கிய நோக்கமாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
1. முக்கிய திட்டங்கள் & புதிய இயக்கங்கள்:
மண்வளப் பாதுகாப்பு இயக்கம்: ‘தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்’ ₹122.51 கோடி செலவில் உருவாக்கப்படும். 1 கோடி விவசாயிகளுக்கு ₹4 கோடி மதிப்பீட்டில் மண்வள அட்டைகள் (Soil Health Cards) வழங்கப்படும்.
பயறு மற்றும் எண்ணெய்வித்து இயக்கம்: தன்னிறைவு அடைவதற்காக ₹203.64 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
சிறுதானிய மற்றும் குறுதானிய இயக்கம்: சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ₹63.81 கோடியும், சாமை, தினை, வரகு உள்ளிட்ட பயிர்களின் சாகுபடியை இருமடங்காக்க ₹7.61 கோடியும் ஒதுக்கீடு.
பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்: பருத்தி உற்பத்தியைப் பெருக்க ₹27.21 கோடி ஒதுக்கீடு.
தென்னை சிறப்புத் திட்டம்: தென்னை சார்ந்த பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க ₹5.30 கோடியில் 'தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம்' (TNCPC) அமைப்பது உட்பட ₹41 கோடி நிதி ஒதுக்கீடு.
பனை பாதுகாப்பு இயக்கம்: பனை விதைகள், கன்றுகள் விநியோகம் மற்றும் உற்பத்திக் கூடாரங்கள் அமைக்க ₹2 கோடி ஒதுக்கீடு.
காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டம்: பயிர் சேதங்களைத் தடுக்க ₹7.35 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம்.
2. விவசாயிகளுக்கு மானியங்கள் & நிதி உதவிகள்:
அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினச் சிறு, குறு விவசாயிகளுக்கு உயர்மதிப்பு திட்டங்களில் 20% கூடுதல் மானியம் வழங்க ₹56.72 கோடி ஒதுக்கீடு. மேலும் 300 ஆழ்துளைக் கிணறுகள், மின்மோட்டார்கள் மற்றும் சூரியசக்தி பம்புசெட்டுகளுக்கு 100% மானியம் வழங்கப்படும்.
துளித் துளித் தண்ணீர் திட்டம்: 2.2 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்த நீரில் அதிக மகசூல் பெற ₹785 கோடி ஒதுக்கீடு.
சூரியசக்தி பம்புசெட்டுகள்: 1,000 விவசாயிகளுக்கு 80% மானியத்தில் மின்கட்டமைப்பற்ற சூரியசக்தி பம்புசெட்டுகள் அமைக்க ₹23 கோடி.
விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையம்: ₹5.20 கோடி செலவில் புதிய ஆணையம் உருவாக்கப்படும்.
உயிர் உர ஊக்கத்தொகை: உயிர்ம உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ₹4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
3. நவீன தொழில்நுட்பம், ட்ரோன் & AI பயன்பாடு:
‘வான்மகள்’ திட்டம்: 500 நபர்களுக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி மற்றும் 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50% மானியத்தில் ட்ரோன்கள் வழங்க ₹4 கோடி ஒதுக்கீடு.
AI உழவர் செயலி: செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையில் விவசாயிகளுக்குத் தனிப்பயன் ஸ்மார்ட் வேளாண் குறிப்புகளை வழங்க புதிய செயலி உருவாக்கப்படும்.
வேளாண் ஆராய்ச்சி மையம்: ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்க ₹5 கோடி ஒதுக்கீடு.
வேளாண் இயந்திரமயமாக்கல்: இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் 'இ-வாடகை 2.0' செயலியை வலுப்படுத்தவும், புதிய இயந்திரங்கள் கொள்முதல் செய்யவும் ₹20.31 கோடி ஒதுக்கீடு.
4. உயர்கல்வி, உழவர் சந்தை & கட்டமைப்பு மேம்பாடு:
நம்மாழ்வார் உயிர்ம வேளாண் கல்லூரி: தஞ்சாவூர் மாவட்டம் சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி ₹5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
உழவர் சந்தைகள் புனரமைப்பு: உழவர் சந்தைகளைப் புனரமைக்க ₹20 கோடியும், 50 சந்தைகளில் மின்னணு விலைப் பலகைகள் அமைக்க ₹2 கோடியும் ஒதுக்கீடு.
‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’: மாடித் தோட்டம், காய்கறி/பழ விதைத் தொகுப்புகள் வழங்க ₹10 கோடி ஒதுக்கீடு.
விளைபொருள் பாதுகாப்பு: மழை, வெயிலில் இருந்து விளைபொருட்களைப் பாதுகாக்க 43,500 தார்ப்பாய்கள் வாங்க ₹10 கோடி ஒதுக்கீடு.
5. மாநில & மாவட்ட அளவிலான விருதுகள்:
மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது: மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிகளில் வெற்றி பெறும் சிறு, குறு விவசாயிகளுக்கு முதல் பரிசாக ₹2.5 லட்சம், இரண்டாம் பரிசு ₹1.5 லட்சம், மூன்றாம் பரிசு ₹1 லட்சம் வழங்கப்படும்.
நம்மாழ்வார் விருது: சிறந்த 5 இயற்கை விவசாயிகளுக்கு ₹11 லட்சம் பரிசுத்தொகையுடன் விருது வழங்கப்படும்.
வெற்றி விவசாயி விருது: மாவட்ட அளவில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ₹50,000, இரண்டாம் பரிசாக ₹25,000 வழங்கப்படும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுரை - தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதை திட்டம் : ரூ.2.51 கோடி ஆலோசனைக் குழு டெண்டர் வெளியீடு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 9:23:56 PM (IST)

ஆடி கிருத்திகை விழா: தூத்துக்குடி சிவன் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை - திரளான பெண்கள் வழிபாடு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:11:56 PM (IST)

உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி: சட்டசபை வளாகத்தில் பரபரப்பு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:58:38 PM (IST)

அரசுப் பள்ளி சாதனை: நீட் தேர்வில் வென்று 10 மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்குத் தேர்வு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:24:24 PM (IST)

முந்தைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வேளாண் பட்ஜெட் தாக்கல்! - எடப்பாடி பழனிசாமி சாடல்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:48:02 PM (IST)

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய 141-வது ஆண்டு திருவிழா: திருத்தேர் பவனி கோலாகலம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:18:30 PM (IST)


