» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: ஆதரவாளர்கள் முற்றுகை - மறியல் - பரபரப்பு!
வெள்ளி 3, ஜூலை 2026 12:16:44 PM (IST)
முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று காவல் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 20 ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்பொழுது, தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும் அவதூறான வகையிலும் கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, நகரச் செயலாளர் செல்வம் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் கைதாவதைத் தவிர்க்க அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், "7 முறை எம்எல்ஏ-வாக இருப்பவர் பொதுவெளியில் இப்படிப் பேசலாமா?" என்று கடுமையான கண்டனம் தெரிவித்து முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்ட சில நிமிடங்களிலேயே காவல் துறை தங்களது கைது நடவடிக்கையைத் தொடங்கியது. இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரப்பூர்வ ஆய்விற்காகச் சென்றிருந்தார். அவர் அங்கு ஆய்வில் இருந்தபோதே, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திபு தலைமையிலான ஆத்தூர் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று அவரை முறைப்படி கைது செய்து அழைத்துச் சென்றனர்.
வாகனம் முற்றுகை - ஆதரவாளர்கள் வாக்குவாதம்:
கைது நடவடிக்கையின் போது அனிதா ராதாகிருஷ்ணன், தான் வந்த சொந்த வாகனத்தில் வர அனுமதி கோரினார். ஆனால், அதற்குப் பாதுகாப்பு காரணங்களுக்காகக் காவல் துறையினர் அனுமதி மறுத்து, தங்களது காவல் துறை வாகனத்திலேயே அவரை ஏற்றி அழைத்துச் சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் காவல் துறை வாகனத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் ஆத்தூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
பின்னர், போலீசார் ஆத்தூர் காவல் நிலையத்தில் வைத்து அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி சோதனையில் ரூ.7.49 லட்சம் ரொக்கம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை!
வெள்ளி 3, ஜூலை 2026 7:27:38 PM (IST)

குதிரை பேர விவகாரத்திற்கு முதலமைச்சர் விஜய் சிபிஐ விசாரணை கேட்பாரா? அப்பாவு கேள்வி!
வெள்ளி 3, ஜூலை 2026 5:16:19 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை!
வெள்ளி 3, ஜூலை 2026 4:59:24 PM (IST)

ஆட்சியைக் கவிழ்க்கச் சதித் திட்டம்: செந்தில் பாலாஜியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!
வெள்ளி 3, ஜூலை 2026 3:55:01 PM (IST)

கோயில்களில் முறைகேடு, லஞ்சம் புகார் அளிக்க அமைச்சர் இ-மெயில் முகவரி வெளியீடு!
வெள்ளி 3, ஜூலை 2026 12:45:54 PM (IST)

பொதுமக்களுக்குப் பாதுகாப்பே இல்லை: கனிமொழி எம்பி கடும் கண்டனம்!
வெள்ளி 3, ஜூலை 2026 12:12:51 PM (IST)


