» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடக் கூடாது: அமைச்சர் வன்னி அரசு கடும் எதிர்ப்பு!
வெள்ளி 3, ஜூலை 2026 10:53:24 AM (IST)

தமிழ்நாட்டின் நிர்வாகத்துக்குள் கவர்னர் தலையிடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மதுரையில் நிகழ்வு ஒன்றில் பேசிய தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், "மதுரை வைகை ஆற்றைப் பார்த்தேன். ஆறு உள்ளது, நீர் எங்கே? துப்பாக்கி எடுத்து போருக்குச் செல்வது மட்டுமல்ல, நதிகளை மீட்பதும் தேசப்பற்றுதான். வைகையை மீட்க இளைஞர்கள் முன்வர வேண்டும். வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், கவர்னர் மாளிகையே களமிறங்கும்" என்று பேசியுள்ளார்.
அதனை தொடர்ந்து மதுரை மாவட்ட கலெக்டர், காவல்துறை ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தையும் நடத்தியுள்ளார் பொறுப்பு கவர்னர் அர்லேகர். கேரளாவின் கவர்னராக உள்ள அர்லேகர், கடந்த மார்ச் 12-ம் தேதி தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக பதவியேற்றார். பொறுப்பு கவர்னருக்கு பொறுப்பு இருக்க வேண்டாமா என்று தமிழ்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பும்படி அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன.
மும்மொழி கொள்கை எனும் பெயரில் இந்தி திணிப்பு, தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் குலக்கல்வியான சனாதன கருத்தியலை கொண்ட புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றால்தான், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு சொல்லி வருகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக, கூட்டாட்சி தத்துவத்தை ஒழிக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு கொண்ட பொறுப்பு கவர்னர் இது குறித்து வாய் திறப்பாரா? தமிழ்நாட்டின் நீர் ஆதாரமான காவிரி ஆற்றை தடுத்து நிறுத்தி, எமது உரிமையை பறிக்கும் வகையில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு சொல்லி வருகிறது.
அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு மறைமுகமாக தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் இசைவு இல்லாமல், கடும் எதிர்ப்பை மீறி மேகதாது அணை திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் இத்திட்டத்தை எதிர்த்து பொறுப்பு கவர்னர் வாய் திறப்பாரா?
தமிழ்நாட்டின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து எதுவும் பேசாத கவர்னர் அர்லேகர், அவருக்கு முன்பு இருந்த கவர்னர் ஆர்.என்.ரவி போலவே தமிழர்களுக்கு தொடர்பில்லாத, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான கருத்துகளை கூறி வருகிறார்.
கடந்த ஜூலை 1-ம் தேதி தான் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கவர்னர் அர்லேகர் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் நலன்கள் குறித்து உள்துறை மந்திரிக்கு ஏதேனும் கோரிக்கை வைத்தாரா? அல்லது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக செயல்பட வேண்டும் என 'ஆலோசனை' பெற்று வந்தாரா என்று கேள்வி எழுகிறது.
2014-ல் மத்திய பாஜக ஆட்சி அமைந்ததும், தூய்மை கங்கை திட்டத்தை கொண்டு வந்தனர். நீர்வளத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 2014 முதல் 2026 வரை செலவிடப்பட்ட மொத்த தொகை 26,824.86 கோடி ரூபாயாகும். 26 ஆயிரம் கோடியை கொட்டிய பின்பும் கங்கை ஆற்றின் நிலை என்ன? மனித பிணங்களும், ஆலை கழிவுகளும் தானே அதன் அடையாளமாக இன்றும் உள்ளது. இது குறித்து வாய் திறப்பாரா பொறுப்பு கவர்னர்?
காவிரி உரிமையை பாதுகாப்பது, வைகையை மீட்பது, தாமிரபரணியை போற்றுவது ஆகிய கடமைகளை தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்ளும். எமது முதல்வர் விஜய் அதற்கான திட்டங்களை உத்திகளை மேற்கொள்வார். கவர்னர் முதல்வருக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லலாம். அதை விடுத்து, அதிகாரிகளை வரவழைத்து ஆய்வுக்கூட்டங்களை நடத்த முயற்சிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசை அவமதிப்பது மட்டுமல்ல; ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும்.
தமிழ் வளர்த்த மதுரையில் 'வசுதைவ குடும்பகம்' என்று தமிழர்களுக்கு பாடம் எடுத்துள்ளார் பொறுப்பு கவர்னர் அர்லேகர். புறநானூறு சொல்லும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என எல்லோரையும் நேசிக்கும் தமிழர்களுக்கு தேச பக்தி குறித்து பாடம் எடுக்க தேவையில்லை. தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆளுமையுள்ள புதிய முதல்வர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்து வருகிறார். தமிழ்நாட்டின் இறையாண்மைக்குள் - நிர்வாகத்துக்குள் கவர்னர் தலையிடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி சோதனையில் ரூ.7.49 லட்சம் ரொக்கம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை!
வெள்ளி 3, ஜூலை 2026 7:27:38 PM (IST)

குதிரை பேர விவகாரத்திற்கு முதலமைச்சர் விஜய் சிபிஐ விசாரணை கேட்பாரா? அப்பாவு கேள்வி!
வெள்ளி 3, ஜூலை 2026 5:16:19 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை!
வெள்ளி 3, ஜூலை 2026 4:59:24 PM (IST)

ஆட்சியைக் கவிழ்க்கச் சதித் திட்டம்: செந்தில் பாலாஜியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!
வெள்ளி 3, ஜூலை 2026 3:55:01 PM (IST)

கோயில்களில் முறைகேடு, லஞ்சம் புகார் அளிக்க அமைச்சர் இ-மெயில் முகவரி வெளியீடு!
வெள்ளி 3, ஜூலை 2026 12:45:54 PM (IST)

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: ஆதரவாளர்கள் முற்றுகை - மறியல் - பரபரப்பு!
வெள்ளி 3, ஜூலை 2026 12:16:44 PM (IST)


