» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மானிய மண்ணெண்ணெய் விலையை உயர்த்தக் கூடாது : தமிழக அரசுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை!

புதன் 1, ஜூலை 2026 8:34:54 AM (IST)

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கு தற்போதைய மானிய விலையான ரூ.25-க்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தக் கூடாது என முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, கடந்த 2010 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி, வெளிச்சந்தையில் மண்ணெண்ணெய் விலை எவ்வளவு இருந்தாலும், பதிவு செய்யப்பட்ட ஒரு நாட்டுப்படகுக்கு ஆண்டுக்கு 2,400 லிட்டர் தொழில்மய மண்ணெண்ணெயை மானிய விலையாக ரூ.25-க்கு வழங்கவும், எக்காரணத்தைக் கொண்டும் இந்த விலையை உயர்த்தக் கூடாது என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

பின்னர், மீனவர்களுக்குப் பெரிதும் பயன்படும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு, கடந்த 2023 ஆம் ஆண்டு 3,700 லிட்டராக உயர்த்தப்பட்டது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மூன்று மாவட்டங்களின் 6,500 நாட்டுப்படகுகளுக்கு ரூ.25 விலையில் மண்ணெண்ணெய் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான கொள்முதல் மற்றும் விற்பனைக்கு இடையேயான வித்தியாசத் தொகையை அரசே மானியமாக ஏற்று வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, லிட்டருக்கு ரூ.25-க்கு வழங்கப்படும் இந்த மண்ணெண்ணெய் விலையை உயர்த்த உள்ளதாகவும், அதன் விநியோக அளவைக் குறைக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நடவடிக்கை நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் என அனிதா ராதாகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார். 

எனவே, மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மண்ணெண்ணெய் விலையை எக்காரணத்தைக் கொண்டும் உயர்த்தக் கூடாது என்றும், மாறாக இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் நாட்டுப்படகுகளின் எண்ணிக்கை மற்றும் வழங்கப்படும் மண்ணெண்ணெயின் அளவை மேலும் அதிகரித்து திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory