» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சோனியா, ராகுல் காந்தியுடனான சந்திப்புகள் ரத்து: சென்னை புறப்பட்டார் முதல்வர் விஜய்!

வியாழன் 28, மே 2026 12:08:43 PM (IST)

சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சென்னை புறப்பட்டார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது பயணத் திட்டங்களைச் சுருக்கிக்கொண்டு இன்று அவசரமாகச் சென்னை புறப்பட்டார். இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) ராகுல் காந்தி ஆகியோருடனான சந்திப்புகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லிக்கு நேற்று காலை தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் பயணம் மேற்கொண்டார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்குச் சென்ற அவருக்கு, அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றதோடு, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

சிறிது நேர ஓய்விற்குப் பின், நேற்று மாலை 4.30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு மரியாதை நிமித்தமாக அமைந்திருந்தாலும், மாநிலத்தின் முக்கியத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

பிரதமரைச் சந்தித்ததைத் தொடர்ந்து, நேற்று மாலை 6.30 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்தார். இந்த ஆலோசனையின் போது, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்கள், பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநிலத்திற்கான நிதி சார்ந்த பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி, அவற்றை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தினார்.

காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு திடீர் ரத்து:

முன்னதாகத் திட்டமிட்டிருந்தபடி, டெல்லி பயணத்தின் இரண்டாவது நாளான இன்று காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் சோனியா காந்தியையும், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியையும் முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்துப் பேசவிருந்தார். இதற்காகச் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தரப்பிடம் உரிய நேரமும் கோரப்பட்டிருந்தது.

ஆனால், முதலமைச்சர் விஜய் சில முக்கியப் பணிகள் காரணமாக அவசரமாகச் சென்னை திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டதால், காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகத் தமிழ்நாடு இல்ல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இரண்டு நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் டெல்லியிலிருந்து சென்னைக்குத் தனது தனி விமானம் மூலம் புறப்பட்டார். டெல்லி அரசியல் வட்டாரத்தில் இச்சந்திப்பு ரத்து விவகாரம் தற்காப்பு அரசியல் காரணங்களாகப் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory