» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு மட்டுமே; பிளவு இல்லை!- எஸ்பி வேலுமணி விளக்கம்!

புதன் 27, மே 2026 5:00:46 PM (IST)



அதிமுகவில் கடந்த சில நாட்களாக சட்டமன்ற உறுப்பினர்களிடையே நீடித்து வந்த உட்கட்சி அதிகாரப் போட்டிகள் மற்றும் பிளவுகள் முழுமையாக முடிவுக்கு வந்துள்ளன. "எங்களுக்குள் இருந்தது வெறும் கருத்து வேறுபாடுதானே தவிர, கட்சியில் எவ்விதப் பிளவும் இல்லை" என்று எஸ்பி வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராகத் தனியாகச் செயல்பட்டு வந்த எஸ்பி வேலுமணி அணியினர், நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் மீண்டும் முழுமையாக ஒன்றிணைந்தனர். இதனைத் தொடர்ந்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாகச் சென்று, எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியைக் கொறடாவாகவும் நியமிக்கக் கோரி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் முறைப்படி கூட்டுக்கடிதம் அளித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்ததாவது: "கட்சிக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாகச் சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டோம். அதனைத் தொடர்ந்து இரு தரப்பிலும் சபாநாயகரிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க மனுக்களை அளித்திருந்தோம். தற்போது இரு தரப்பிலும் கொடுக்கப்பட்ட அந்தத் தகுதி நீக்க மனுக்கள் அனைத்தும் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டு விட்டன. 

எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்த காலத்திலும், எங்களது ஒரே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஒரு அரசியல் கட்சிக்குத் தேர்தலில் வெற்றி, தோல்விகள் ஏற்படுவது வழக்கம் என்று குறிப்பிட்ட அவர், "ஜெயலலிதா சொன்னது போல அதிமுக நூறாண்டுகள் கடந்து மக்களுக்காக இயங்க வேண்டுமானால், தற்போதைய தோல்விகள் குறித்து விரிவாக ஆராய வேண்டும். அதற்காகக் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும், பிரத்தியேகக் குழு அமைக்க வேண்டும் என்றும் தலைமயிடம் கோரிக்கைகளை வைத்திருந்தோம்.

எங்களது அந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து, ஒவ்வொன்றாகச் செய்து தருவதாகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். எங்களுக்குள் இருந்தது தற்காலிகக் கருத்து வேறுபாடுதானே தவிர, பிளவு இல்லை. இப்போது எங்களுக்குள் இருந்த அனைத்துக் கருத்து வேறுபாடுகளும் நீங்கிவிட்டன. இனி ஒற்றுமையாக அதிமுக வலுவாகச் செயல்படும். அனைவரும் ஒன்றிணைந்து களப்பணியாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும் எங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்" என்றார்.

சி.வி.சண்முகமும் எங்களுடன் தான்...

அதிமுக பொன்விழா கண்ட பேரியக்கம் என்றும், தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்த பெருமைக்குரியது என்றும் தெரிவித்த அவர், "நாங்கள் எவ்விதப் பதவிக்காகவும் தவெக அரசை ஆதரிக்கவில்லை என்பதை ஆளுங்கட்சியும் தெளிவுபடுத்தியுள்ளது. கட்சியின் எதிர்கால நலன் கருதி மட்டுமே கோரிக்கைகளை முன்வைத்தோம். மூத்த தலைவர் சி.வி.சண்முகமும் எங்களுடன் தான் இருக்கிறார். நாங்கள் அனைவரும் தற்போது ஒற்றுமையாக இருக்கிறோம்" என்று எஸ்பி வேலுமணி தனது சமரச விளக்கத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory