» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மண், மானம், மொழியைக் காக்க மீண்டும் திமுக ஆட்சி: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!

திங்கள் 13, ஏப்ரல் 2026 7:54:45 PM (IST)



"தமிழகத்தின் மண், மானம் மற்றும் மொழியைப் பாதுகாத்திட முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்" எனத் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன், இன்று 34-வது வார்டு 3-ம் மைல் பகுதியில் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து ஆசிரியர் காலனி, மில்லர்புரம், அண்ணா நகர் உள்ளிட்ட 33, 32, 31 ஆகிய வார்டுகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் இந்தப் பிரசாரத்திற்குத் தலைமை தாங்கினார்.

பிரசாரத்தின் போது அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பொருளாதாரம், தொழில் வளர்ச்சி மற்றும் ஜவுளி உற்பத்தி எனப் பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னேற்றம் கண்டுள்ளது. தூத்துக்குடியில் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மழை மற்றும் வெள்ளக் காலங்களில் நிர்வாகிகளுடன் இணைந்து நான் நேரடியாகக் களத்தில் நின்று உங்களுக்காகப் பணியாற்றினேன். தொகுதி முழுவதும் தேவையான இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், வைஃபை வசதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலங்கள் அமைக்கப்படும்.உங்களோடு இருந்து பணியாற்றும் தனக்கு மீண்டும் 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் சண்முகம், தேமுதிக தொகுதிப் பொறுப்பாளர் வல்லரசு துரை, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் யூசுப், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் விமல் வங்காளியார், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory