» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாடு காவல்துறை இன்னும் பாடம் கற்கவில்லை : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சீமான் கண்டனம்!

வியாழன் 9, ஏப்ரல் 2026 10:50:37 AM (IST)

ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலை வழக்கின் தீர்ப்பைப் பார்த்த பிறகும், தமிழ்நாடு காவல்துறை எந்தப் பாடமும் கற்கவில்லை என்று  காவல்துறைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரில் பனைத் தொழிலாளி மணிகண்டன் என்பவர் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலை "கொடுங்கோன்மை" எனச் சாடியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராகக் கடும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். 

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தம்பி மணிகண்டன் மீது காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா துப்பாக்கிச்சூடு நடத்தியது வன்மையான கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.

"ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலை வழக்கின் தீர்ப்பைப் பார்த்த பிறகும், தமிழ்நாடு காவல்துறை எந்தப் பாடமும் கற்கவில்லை. கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கத் திறனற்ற காவல்துறை, கள் இறக்கும் எளிய மனிதர்களைப் பயங்கரவாதிகள் போல வேட்டையாடுவது வெட்கக்கேடானது," என அவர் விமர்சித்துள்ளார்.

டாஸ்மாக் மதுக்கடைகளை அரசு நடத்துவதைச் சுட்டிக்காட்டிய சீமான், உடலுக்குத் தீங்கு செய்யாத பாரம்பரிய உணவான 'கள்' மீது தடை விதித்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கள் சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி நிறுவனம் கள்ளுக்கு உணவுக் குறியீடு வழங்கியுள்ளது.

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கள் சிறப்பு உணவுப் பட்டியலில் உள்ளது. சாராய ஆலைகளை ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களே நடத்துவதால் தான், கள் இறக்கும் தொழிலாளர்கள் மீது ஒடுக்குமுறை ஏவப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் தர்மபுரி, திருச்சி (லால்குடி, மண்ணச்சநல்லூர்) போன்ற பகுதிகளில் பனைத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் பட்டியலிட்ட சீமான், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கும் நிலையில், இத்தகைய அதிகார அத்துமீறல்களுக்கு யார் உத்தரவிட்டது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இந்த வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை (CBCID) விசாரணைக்கு மாற்ற வேண்டும். பனைத் தொழிலாளர்கள் மீதான அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என சீமான் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்:

"பனைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் ஒரே பேரியக்கம் நாம் தமிழர் கட்சிதான். இக்கொடுமைகளை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், வரும் தேர்தலில் உரிய பாடம் புகட்டுவார்கள்," என்று தனது அறிக்கையில் சீமான் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory