» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் மதுபோதை தகராறில் மீனவர் கொலை : இளஞ்சிறார் உட்பட 3 பேர் கைது!

வியாழன் 9, ஏப்ரல் 2026 10:33:30 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மீனவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர், மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கீழ வைப்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகன் ஜாய் விக்டோரியன் (26). மீனவரான இவர், திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து வல்லம் மூலம் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த ஏப்ரல் 3-ம் தேதி இரவு, ஜாய் விக்டோரியன் தனது நண்பர்களுடன் திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 

அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மூன்று பேர் கொண்ட கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜாய் விக்டோரியனைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜாய் விக்டோரியனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தச் சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் அவர்கள், முதலில் 'கொலை முயற்சி' வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜாய் விக்டோரியன், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜாய் விக்டோரியன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய வடபாகம் போலீசார் இந்தத் தாக்குதல் தொடர்பாக திரேஸ்புரம் ஜெயபால்  மகன் லிக்சன் (23), தனபதி மகன் ஐஸ்பர் (29), மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 3பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

தமிழன்Apr 9, 2026 - 10:58:43 AM | Posted IP 172.7*****

காரணம் "மது போதை" , வாழ்க டாஸ்மாக் , வாழ்க திராவிடம் , வாழ்க திராவிட குடும்பம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory