» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீராக்காதல் திருக்குறள் நாட்டிய நாடக நிகழ்ச்சி : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:03:39 PM (IST)



திருநெல்வேலியில் தீராக்காதல் திருக்குறள் தலைப்பின் கீழ் "வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறி நாட்டிய நாடக நிகழ்ச்சி”யினை பேரவைத்தலைவர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரியில் இன்று தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் தீராக் காதல் திருக்குறள் என்ற தலைப்பின் கீழ் "வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறி” - நாட்டிய நாடக நிகழ்ச்சியினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி, திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது: தீராக் காதல் திருக்குறள் என்ற தலைப்பின் கீழ் தமிழ்நாடு முழுவதும் மாணவர்களிடம் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் பெருமைகளை கொண்டுசேர்ப்பதற்கான பணிகள் தமிழ் இணையக் கல்விக்கழகம் மேற்கொண்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறளின் சிறப்பை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குக் குறளோவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்களும், வெற்றிக்கு முயன்ற மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.திருக்குறளின் பொருண்மைகளை எடுத்துரைக்கும் விதமாக நாட்டிய நாடக நிகழ்ச்சிகளை பெரு மற்றும் சிறு நகரங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டு, இதன் தொடர் நிகழ்வாக இன்றையதினம் "வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறி” - நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், வள்ளுவர் சொன்ன வாழ்வியல் நெறிகள் இன்றளவும் மனித இனத்திற்குப் பயன்படும் வகையில் காலத்தால் மாறாத விழுமிய கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்ட திருக்குறளின் செழுமிய கருத்துகளையும் உயர்ந்த நெறிமுறைகளையும் நாட்டிய நாடகம் மூலம் விளக்கப்பட்டது.

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் தமிழின் மிகச்சிறந்த அறநூல். 133 அதிகாரங்களில் 1,330 குறட்பாக்கள் மூலம் அறம், பொருள், இன்பம் என்று நம் வாழ்க்கைக்குக் தேவையான அனைத்து கருத்துக்களைக் கொண்டது இந்நூல். உலகத்தின் பொதுமறையாக விளங்கும் திருக்குறள் தமிழ்மொழியில் உருவானது என்பது தமிழர்களாகிய நாம் பெருமைக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழர்களின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, தொன்மை மாறாமல் அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வதற்காக பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு சேர்த்து வருகிறார்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் காலத்தில் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை நிறுவி பெருமை சேர்த்தார்கள்.

அதேபோல, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தார். மேலும், திருக்குறளைப் படிப்பதால் அறிவு வளர்கிறது. மன அழுத்தம் குறைந்து மனநிலையில் மாற்றம் உண்டாகிறது. மொழித்திறன் வளர்க்கிறது. பகுத்தாராயும் திறன் வளர்க்கிறது. மன அமைதியை ஏற்படுத்துகிறது. எனவே, மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் முன்னேற திருக்குறளைப் படிப்பது மட்டுமல்லாமல் வாழ்க்கையில் பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் இணையக் கல்விக்கழகம் துணை இயக்குநர் அருண்மொழி, மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) மா.சுகன்யா, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.கேரேனாப்புக் லிதியா, தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் இளங்கோ, அரசினர் பொறியியல் கல்லூரி முதல்வர் லதா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory