» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றிச்சென்ற லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: டிரைவர் படுகாயம்

புதன் 28, ஜனவரி 2026 8:33:50 AM (IST)

ஆலங்குளம் அருகே கனிமவளம் ஏற்றிச்சென்ற லாரி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராம பகுதியில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிகளில் இருந்து கேரளாவிற்கு லாரிகள் மூலம் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லப்படுகிறது.

நேற்று அதிகாலையில் ஆலங்குளம் அருகே உள்ள கண்டப்பட்டி விலக்கு பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் இருந்து கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு கனரக லாரி ஒன்று ஆலங்குளம் நோக்கி புறப்பட்டது.

கண்டப்பட்டி விலக்கு பகுதியை தாண்டிச் சென்று கொண்டிருந்த போது அங்கு மர்ம நபர்கள் பதுங்கி இருந்தனர். அவர்கள் திடீரென்று லாரியின் அருகே வந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை பற்ற வைத்து லாரி மீது வீசினர். இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் செங்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் சுப்பிரமணியன் படுகாயம் அடைந்து லாரியை ஓரமாக நிறுத்தி கீழே இறங்கி உயிர் தப்பினார். எனினும் டிரைவரின் இருக்கை தீயில் எரிந்து நாசமானது.

இதை கண்ட அந்த வழியாக மற்றொரு லாரியில் வந்தவர்கள் விரைந்து சென்று, படுகாயம் அடைந்த சுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, லாரியை சோதனை செய்தனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் லாரி டிரைவரின் இருக்கை தீப்பற்றி கருகி இருந்தது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கனிம வளம் ஏற்றிச்செல்ல எதிர்ப்பு தெரிவித்து இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்ததா?, அல்லது டிரைவர் மீதான தனிப்பட்ட விவகாரம் தொடர்பாக நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory