» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீதிமன்ற வளாகத்தில் டிஎஸ்பி சீருடையில் கைது.. தப்பி ஓடியதாக பரவிய தகவல்..!

செவ்வாய் 9, செப்டம்பர் 2025 12:34:22 PM (IST)



காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் நீதிமன்ற வளாகத்தில் சீருடையில் கைது செய்யப்பட்டுள்ளார். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். 

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா பூசிவாக்கம் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருபவர் சிவா. இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் பொருட்கள் வாங்க வந்த நிலையில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.வாய் தகராறு முற்றிய நிலையில் கடையில் இருந்த சிவாவின் மருமகன் லோகேஷ் மற்றும் ஊழியர்கள் முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து இரு தரப்பினரும் வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முருகனின் புகாரின் பேரில் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

பேக்கரி கடை உரிமையாளர் சிவா அளித்த புகாரின் பேரில், முருகன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் பேக்கரி உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படாமல் இருந்தனர்.

இதுகுறித்து முருகன் தரப்பினர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் முறையிட்டதின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ள தவறியதாக நேற்று காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேசுக்கு நீதிபதி ப.உ.செம்மல் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் நேற்று மாலை 5 மணிக்குள் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாவிட்டால் டி.எஸ்.பி. கணேஷ் சங்கரை சிறையில் அடைக்க உத்தரவிடப்போவதாக எச்சரித்தார்.இந்த நிலையில் மாலை 5 மணி வரையில் போலீசார் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை கைது செய்யாததால், நீதிமன்றத்தில் சீருடையில் காத்திருந்த டி.எஸ்.பி.சங்கர் கணேசை காஞ்சீபுரம் கிளை சிறைச்சாலையில் அடைக்க நீதிபதி ப.உ.செம்மல் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதியின் காரிலேயே வழக்கில் ஆஜராக வந்த டி.எஸ்.பி.சங்கர் கணேசை காஞ்சீபுரம் கிளை சிறைச்சாலையில் அடைக்க அழைத்து வந்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி. சிறையில் அடைக்கப்பட உள்ளார் என்பதை அறிந்து காஞ்சீபுரத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து ஏராளமான போலீசார் கிளை சிறை சாலை அருகே குவிந்தனர். 

டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறைக்குச் அழைத்து செல்ல அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து டி.எஸ்.பி.சங்கர் கணேஷ் அவரது அலுவலகத்திற்கு சென்று வர ஜீப்பில் ஏறி சென்றார். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக வதந்தி பரவியது. இதுகுறித்து அறிந்த டி.எஸ்.பி.சங்கர் கணேஷ் உடனடியாக கிளை சிறைச்சாலை வளாகத்திற்கு வந்துவிட்டார். 

இச்சம்பவம் குறித்து அறிந்து ஏராளமான போலீசாரும், வக்கீல்களும் கிளை சிறைச்சாலை அருகில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு டி.எஸ்.பி.சங்கர் கணேஷ் அழைத்து செல்லப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory