» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 22, மே 2025 5:24:40 PM (IST)

டாஸ்மாக்கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், "தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது. 

இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 41 வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், இந்த முறைகேடுகள் தொடர்பாக டாஸ்மாக் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். அமலாக்கத் துறை விசாரணையை முடக்கும் நோக்கில் மாநில அரசு செயல்படுகிறது. ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கை நியாயமாகவும், எந்த இடையூறும் இன்றி விசாரிக்க வேண்டும் எனவே சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க மாநில அரசுக்கு தடை விதிக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் இன்று (மே 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "வழக்குகளை வேறு விசாரணை அமைப்புகளுக்கு மாற்றுவது தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 41 வழக்குகளிலும் டாஸ்மாக் நிர்வாகம் தான் புகார்தாரர் என்பதால், குற்றம்சாட்டப்பட்டவர்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்க வேண்டும்.” எனக் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, "குற்றம் சாட்டப்பட்டவர்களை சேர்க்கும் வரை டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்குகள் முடிக்கப்பட மாட்டாது என உத்தரவாதம் அளிக்கப்படுமா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அப்போது தலைமை வழக்கறிஞர், "வழக்கை முடிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். கீழமை நீதிமன்றம் தான் இதுதொடர்பாக முடிவெடுக்கும். இருப்பினும், அடுத்த விசாரணை வரை டாஸ்மாக் முறைகேடு தொடர்பான எந்த வழக்கையும் முடிக்க கோரி கீழமை நீதிமன்றங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் என உள்துறை செயலாளருக்கு அறிவுறுத்துவதாக.” தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சேர்க்க மூன்று வாரங்கள் மனுதாரருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். மேலும், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட 41 வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory