» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளியில் மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்: கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!

வியாழன் 10, ஏப்ரல் 2025 3:51:34 PM (IST)



பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளியில், பூப்படைந்த மாணவியை வகுப்பறையின் வெளியில் அமரவைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் குறித்து பள்ளி கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகின்றார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் கடந்த 5-ம் தேதி பூப்பெய்தி உள்ளார். இந்நிலையில் தற்பொழுது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வு எழுதுவதற்காக வகுப்பறைக்கு சிறுமி வந்துள்ளார். ஆனால் சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காத பள்ளி நிர்வாகம் சிறுமியை 7-ம் தேதி அறிவியல் தேர்வும், 9-ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகளையும் மற்ற மாணவிகளுடன் அமர்ந்து எழுத விடாமல் வகுப்பறை வாசலில் அமர வைத்து எழுத வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை சிறுமியின் தாய் தனது செல்போனில் பதிவு செய்த வெளியிட்டதால் இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையாக பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல், பள்ளி வகுப்பறைக்குள் சிறுமியை அனுமதிக்காமல் வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் விடுதலை முன்னணியினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், கோவை மாவட்ட பள்ளி கல்வி துறை உதவி இயக்குநர் வடிவேல் ஆகியோர், பள்ளி முதல்வர், பள்ளி கண்காணிப்பாளர், பள்ளி தாளாளர் ஆகியேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஏ.எஸ்.பி. சிருஷ்டி சிங் கூறும்போது, "பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் வழக்கமாக தேர்வு எழுதும் இடத்தில் அனைவரும் அமர்ந்து தேர்வு எழுத வைக்கப்பட்டனர். குறிப்பிட்ட அந்த மாணவி மட்டும் பெற்றோர் கோரிக்கையின்படி தான் தனியாக அமர்ந்து தேர்வு எழுதி உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்கு, பெற்றோர் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித புகார் வரவில்லை.” என்றார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் கூறும்போது, "பள்ளி மாணவியை பள்ளியின் வாசலில் அமர்த்தி வைக்கப்பட்டு தேர்வு எழுத வைக்கப்பட்ட சம்பவத்தில், இரண்டு விதமான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறை சார்பிலும், இரண்டாவது தனியார் பள்ளி என்பதால் தனியார் பள்ளிகளுக்கு என இருக்கும் மாவட்ட கல்வி அலுவலர் சார்பாக பள்ளியின் மேலாண்மை அதிகாரிகளிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டு இருக்கிறது. விசாரணை முடிந்தபின், அதற்கான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கும் போது, நிச்சயம் அதற்கான சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.

பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்!

இதனிடையே பள்ளி முதல்வர் ஆனந்தியை பணியிடை நீக்கம் செய்து பள்ளியின் தாளாளர் உத்தரவிட்டுள்ளார். விடியோவில் பேசிய மாணவி, பள்ளியின் முதல்வர்தான் இங்கு அமர்ந்து தேர்வெழுதச் சொன்னதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory