» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் கோவில் வடிவமைப்பு : தமிழக முதல்வருக்கு சேகர்பாபு புகழாரம்

வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:58:07 AM (IST)

திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூரை வடிவமைத்த சிற்பி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்' என சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசினார்.

தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் (அ.தி.மு.க), ‘அனைத்து பெரிய கோவில்களுக்கும் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, ‘கடந்த ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.22 கோடியுடன் கூடுதலாக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்து திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதி ஓராண்டுக்கு முன்பே பயன்பாட்டுக்கு வந்து விட்டது. திருச்செந்தூர் கோவிலுக்கு பெருந்திட்ட பணிகளுக்கு அனுமதி பெற்று 440 கோடி ரூபாய் செலவில் திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூரை வடிவமைத்து கொண்டிருக்கிற சிற்பி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்' என தெரிவித்தார்.

அப்போது சேவூர் ராமச்சந்திரன், ‘மீட்கப்பட்ட கோவில் நிலங்கள், இன்னும் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்படாமல் உள்ளதால் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது' என தெரிவித்தார்.

அதற்கு அமைச்சர் சேகர்பாபு, ‘கடந்த 10 ஆண்டுகளில் (அதாவது அ.தி.மு.க. ஆட்சியில்) ரூ.2,800 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகள் மட்டுமே மீட்கப்பட்டது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.7,850 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகள் மீட்கப்பட்டு உள்ளது. மேலும், தனிநபர்கள் பெயரில் இருந்த ரூ.450 கோடி மதிப்பிலான 22 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்கள் கட்டாயம் மீட்கப்படும்' என பதில் அளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory