» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!!

வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:56:05 PM (IST)



பிற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ஆட்சியமைக்கும் பா.ஜ., வியூகம் தமிழகத்தில் எடுபடாது. தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார் குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சுமார் 2 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.357.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, விழாவில் அவர் பேசியதாவது; கடந்த அ.தி.மு.க.,வின் இருண்ட ஆட்சி காலத்தில் முடங்கி கிடந்த உள்கட்டமைப்பு பணிகள், கடந்த 4 ஆண்டுகளாக சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இன்று மட்டும் ரூ.390 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். ரூ.418 கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்துள்ளேன்.

இன்று மட்டும் 63 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப் போகிறேன். நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளிலேயே இங்கு தான் அதிக பட்டாக்களை தரப் போகிறேன். இது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில உரிமைகளுக்காகவும் தான் தமிழகம் போராடுகிறது. மாநில உரிமைகளை கேட்பது தவறா? நீங்கள் எதையும் செய்யாததால் தான், கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றோம். தி.மு.க.,வின் பவர் என்ன என்பது தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, இந்திய மக்களுக்கே இப்போது தெரிந்திருக்கிறது. திசை மாறி சென்றிருப்பவர்கள், திசைகாட்டியாக இருக்கும் எங்களை பார்த்து புலம்ப வேண்டாம்.

மத்திய அமைச்சர் அமித் ஷாவால் நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியும் என்று சொல்ல முடியுமா? ஹிந்தியை திணிக்க மாட்டோம் என்று சொல்ல முடியுமா? தமிழகத்திற்கு இவ்வளவு சிறப்பு நிதி கொடுத்துள்ளோம் என்று பட்டியல் போட முடியுமா? தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் எண்ணிக்கை குறையாது என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா?

பிரதமர் ராமேஸ்வரத்திற்கு பாலத்தை திறக்க வந்தார்கள். அதனை விமர்சிக்க விரும்பவில்லை. எவ்வளவு நிதி கொடுத்தாலும் அழுகிறார்கள் என்று விமர்சனம் செய்தார். மத்திய அரசிடம் கையேந்தி நிற்க மாநிலங்கள் பிச்சைக்காரர்களா? என்று நீங்கள் சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இப்போது நாங்கள் கேட்டால் மட்டும் அழுகை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? நான் அழ வில்லை. இது தமிழகத்தின் உரிமை. மாநிலங்கள் சுயாட்சி அதிகாரம் பெற்றிருந்தால் தான், இங்குள்ள மக்களுக்கு நலத்திட்டங்களை செய்ய முடியும். டில்லியின் ஆளுமைக்கு தமிழகம் என்றும் அடிபணியாது.

பிற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ஆட்சியமைக்கும் பா.ஜ., வியூகம் தமிழகத்தில் எடுபடாது. தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான். நீங்கள் எத்தனை பரிவாரங்களை சேர்த்துக் கொண்டு வந்தாலும் ஒருகை பார்க்க தி.மு.க., தயார். அடுத்த ஓராண்டில் நீங்கள் எப்படியெல்லாம் எங்களை மிரட்டுவீர்கள் என்று எங்களுக்கு தெரியும், இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

சந்திரன்Apr 19, 2025 - 05:50:54 AM | Posted IP 172.7*****

திராவிட மாடல் என்றால் தெலுங்கர்கள் ஆட்சி தானே அது இல்லாமல் தமிழர்கள் ஆட்சிதான் வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory