» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அறிவிப்பு

வியாழன் 10, ஏப்ரல் 2025 12:18:58 PM (IST)

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தானே செயல்படப் போவதாகவும், அன்புமணி ராமதாஸ், செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் பேசியதாவது: "பாமக நிறுவனரான நான், கட்சியின் தலைவர் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலுக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில், கட்சியின் தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸை கட்சியின் செயல் தலைவராக நியமிக்கிறேன்.

தேர்தல் கூட்டணி குறித்து நிர்வாகக் குழு, செயற் குழு, மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுக்கப்படும். தலைவர் பதவியை நானே எடுத்துக் கொண்டதற்கு பல காரணங்கள் உண்டு. அதனை உங்களுடன் தற்போது பகிர முடியாது” என்றார்.

2022 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக தேர்தலை சந்தித்தது. ஆனால், ஒரு தொகுதியில்கூட வெல்லவில்லை. இதையடுத்து, பாமகவின் 2025- ஆம் புத்தாண்டு சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் பட்டனூரில் நடைபெற்றது. அப்போது பாமகவின் இளைஞரணித் தலைவராக தனது மகள் வழிப் பேரன் ப . முகுந்தனை நியமிப்பதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

இதற்கு கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து, கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆன நிலையில், அவருக்கு பதவி தருவதற்கு பதிலாக, சுறுசுறுப்பாக பணியாற்றக் கூடிய நபருக்கு அப்பதவியை வழங்கலாம் என்று மேடையிலேயே தெரிவித்து பேசினார். உடனடியாக ராமதாஸ், என்னால் உருவாக்கப்பட்ட கட்சி இது. அவர் இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்படுகிறார் என மீண்டும் பேசினார். 

இதையடுத்து பனையூரில் உள்ள அலுவலகத்தில் தொண்டர்கள் என்னை சந்திக்கலாம் என அறிவித்த அன்புமணி ராமதாஸ், மேடைடையிலிருந்து வெளியேறி சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து, திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தையை கட்சி நிர்வாகிகளும் குடும்பத்தினரும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory