» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் : எடப்பாடி பழனிச்சாமி

வெள்ளி 14, மார்ச் 2025 11:56:12 AM (IST)



டாஸ்மாக் ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சபாநாயகர் அப்பாவு பதவிநீக்க கோரிக்கையை விவாதத்துக்கு எடுக்க வேண்டும், டாஸ்மாக் முறைகடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று இந்த திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காததால், அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்துவரும் சூழலில் அதிமுக எம்எல்ஏ.,க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின், அப்போதைய சபாநாயகர் தனபாலை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறிய கோரிக்கையை சட்டமன்ற விதிகளின்படி விவாதத்துக்கு எடுத்துக் கொண்டோம். அதேபோல், தற்போது அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் கொண்டு வந்துள்ள சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பதவி நீக்க கோரிக்கை திமுக அரசு விவாதத்துக்கு எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

அதேபோல், கடந்த ஒருவார காலமாக டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் இதர அலுவலகங்களிலும், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் விநியோகம் செய்யும் மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், நேற்று அமலாக்கத்துறை செய்தி ஒன்றை வெளியிட்டது. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விசாரணை முடியும்போது, இந்த டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக சுமார், கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்த அரசு அதுகுறித்து இதுவரை இன்னும் எந்தவொரு செய்தியையும் வெளியிடவில்லை. 

அமலாக்கத்துறை சோதனை நடத்தி, அந்த சோதனை மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக அறிவித்த பிறகும், இந்த அரசு எந்த செய்தியும் வெளியிடாத காரணத்தால், இதற்கு தார்மீக பொறுப்பேற்று இந்த திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நிதிநிலை அறிக்கை தொடர்பான கேள்விக்கு, "முழுமையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபிறகு அதுகுறித்து கருத்துகளை தெரிவிக்கிறேன்” என்று கூறினா


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory