» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்!
ஞாயிறு 19, ஜனவரி 2025 1:47:56 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவரான சுப்பிரமணியர் தை உத்திர நட்சத்திர தினத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டார். எனவே, ஆண்டுதோறும் தை மாதம் உத்திர நட்சத்திரத்தன்று இக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. அதன் படி இந்த ஆண்டுக்கான தை உத்திர வருஷாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. அதன் பிறகு கோயில் தங்கக் கொடி மரம் அருகே கும்பங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, பூஜை செய்யப்பட்ட கும்ப கலசங்கள் விமான தளத்துக்கு எடுத்துவரப்பட்டு, காலை 8 மணியளவில் மூலவருக்கும், தொடர்ந்து சண்முகர், வெங்கடா சலபதி, வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’’ என பக்திப் பெருக்குடன் கோஷம் முழங்கினர். தொடர்ந்து மூலவர் உள்ளிட்ட சன்னதிகளில் அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித் தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். இரவு 7 மணியளவில் மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.