» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுகவின் நாடகத்தைப் பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள்: விஜய் பேச்சு!!
திங்கள் 20, ஜனவரி 2025 3:21:27 PM (IST)
திமுகவின் நாடகத்தைப் பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள் என பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தவெக தலைவர் விஜய் பேசினார்
பரந்தூர்: "திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டைத்தானே பரந்தூரிலும் எடுத்திருக்க வேண்டும். அது எப்படி, எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? இனிமேலும், உங்களுடைய நாடகத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள்” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
சென்னையின் 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 13 கிராமங்களிலிருந்து 5,100 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால் அந்த கிராமத்தை மையமாக வைத்து 910-வது நாளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராடும் பொதுமக்களுக்கு ஆதரவாக விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீர்மானம் நிறைவேற்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து போராடும் மக்களை சந்திக்கவும் முடிவு செய்தார். அதற்கான காவல்துறை அனுமதி பெறப்பட்டு, இன்று (ஜன.20) பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை தவெக தலைவர் விஜய் பொடவூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: கிட்டத்தட்ட ஒரு 910 நாட்களுக்கு மேல், உங்களுடைய மண்ணுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். "இந்தப் போராட்டம் குறித்து ராகுல் என்று சிறுவன் பேசியதை நான் கேட்டேன். அந்த குழந்தையின் பேச்சு என் மனதை ஏதோ செய்துவிட்டது. உடனடியாக உங்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. உங்கள் அனைவருடனும் பேசியே ஆக வேண்டும் என்று தோன்றியது. உங்கள் அனைவருடனும் நான் தொடர்ந்து நிற்பேன் என்று சொல்லணும் என்று தோன்றியது.
ஒவ்வொரு வீட்டுக்கு ரொம்ப முக்கியமானவர்கள் அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்கள்தான். அதேபோல், நமது நாட்டுக்கு ரொம்ப முக்கியமானவர்கள், உங்களைப் போன்ற விவசாயிகள்தான். அதனால், உங்களைப் போன்ற விவசாயிகளின் காலடி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டுத்தான், என்னுடைய பயணத்தை தொடங்க வேண்டும் என்ற ஒரு முடிவோடுதான் இருந்தேன். அதற்கு சரியான இடம் இதுதான் என்று எனக்குத் தோன்றியது.
என்னை உங்கள் வீட்டில் இருக்கிற ஒரு மகனாக, என்னுடைய கள அரசியல், உங்களின் ஆசீர்வாதத்தோடு, இங்கிருந்துதான் தொடங்குகிறது. தவெக முதல் மாநில மாநாட்டில் நமது கட்சியின் கொள்கைகளை எல்லாம் எடுத்துக் கூறினேன். அதில் ஒன்றுதான் இயற்கை வளப்பாதுகாப்பு. சூழலியல் மற்றும் காலநிலை நெடுக்கடியை எதிர்கொள்ளக்கூடிய, இயற்கைக்கு ஊறு விளைவிக்காத, பகுதிசார் மாநில வளர்ச்சி பரவலாக்கம், இதுதான் தவெக அறிவித்த அந்த கொள்கை. இதை இங்கு நான் சொல்வதற்கு காரணம், வாக்கு அரசியலுக்காக அல்ல.
அதேபோல், அந்த மாநில மாநாட்டில் விவசாய நிலங்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம் குறித்து பேசினேன். அதில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரபரப்பளவில் 13 நீர்நிலைகளை அழித்து சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் இந்த திட்டத்தை மத்திய,மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். மேலும், இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும், விவசாயிகள் பாதிக்கப்படும் இந்த திட்டத்துக்கு எதிராக, சட்டப்போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என்று கூறியிருந்தோம். அதை இங்கு உங்கள் முன்பாக மிகவும் உறுதியாக வலியுறுத்துகிறேன்.
இந்தப் பிரச்சினையில் நான் உங்களுடன் உறுதியாக நிற்பேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் எல்லாம் கிடையாது. விமான நிலையமே வரக்கூடாது என்றெல்லாம் நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் வரக்கூடாது என்றுதான் கூறுகிறேன். இதை நான் சொல்லவில்லை என்றால், நான் வளர்ச்சிக்கு எதிரானவன், என்றொரு கதையைக்கட்டி ஆரம்பித்துவிடுவார்கள். நமக்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. எல்லாவற்றுக்கும் மேலே, இன்றைக்கு இந்த பூமியில் வாழும் எல்லா உயிரினங்களின் இருப்பையும், புவி வெப்பமயமாதல் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
அதனுடைய தாக்கம்தான், ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் சென்னை மாநகரம் எப்படி வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு அறிவியல் ஆய்வில், இப்படி ஒவ்வொரு வருடமும் சென்னையில் ஏற்படுகிற வெள்ளத்துக்கு காரணமே, இங்கு இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கிற சதுப்பு நிலங்களை, நீர்நிலைகளை அழித்ததுதான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இப்படி ஒரு சூழல் இருக்கும்போது, 90 விழுக்காடு விவசாய நிலங்கள், நீர்நிலைகளை அழித்து பரந்தூர் விமான நிலையத்தை கொண்டு வரவேண்டும் என்ற முடிவை எடுக்கும் எந்த அரசாக இருந்தாலும், அது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்க முடியும்.
சமீபத்தில், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து தமிழக அரசு ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டைத்தானே பரந்தூர் பிரச்சினையிலும் அரசு எடுத்திருக்க வேண்டும். எடுக்க வேண்டும். எப்படி அரிட்டாப்பட்டி மக்கள் நம்ம மக்களோ, அதுபோலத்தானே பரந்தூர் மக்களும் நம்ம மக்கள். அப்படித்தானே ஒரு அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லையே? ஏன் செய்யவில்லை? , காரணம், இந்த விமான நிலையத்தையும் தாண்டி, இந்த திட்டத்தில் அரசுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது.அதை நம்ம மக்கள் தெளிவாக புரிந்துவைத்துள்ளனர்.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டைத்தானே பரந்தூரிலும் எடுத்திருக்க வேண்டும். அதெப்படி, எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? எனக்கு புரியவில்லை. இனிமேலும், உங்களுடைய நாடகத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள். நீ உங்களுடைய வசதிக்காக அவர்களுடன் நிற்பதும், அவர்களுடன் நிற்காமல் இருப்பதும், நாடகம் ஆடுவதும், நாடகம் ஆடாமல் இருப்பதும், நம்புற மாதிரி நாடகம் ஆடுவதில் நீங்கள்தான் கில்லாடிகள் ஆச்சே, அதையும்மீறி விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராடினால் பிரச்சினைதான்.
எனவே, இனிமேல் உங்களுடைய நாடகத்தைப் பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள். பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை நான் கேட்டுக் கொள்கிறேன். விவசாய நிலங்கள் இல்லாத, பாதிப்புகள் குறைவாக இருக்கும் இடமாகப் பார்த்து விமான நிலையத்தை கொண்டு வாருங்கள். வளர்ச்சிதான் மக்களின் முன்னேற்றம். ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும். பரந்தூர் கிராம தேவதைகளான அம்மன்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். உங்களுக்காகவும், உங்களுடைய கிராமத்துக்காகவும், இனி உங்கள் வீட்டுப் பிள்ளையான நானும், தவெக-வினரும், சட்டத்துக்குட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களுடன் உறுதியாக நிற்பேன்.
ஏகானபுரம் ஊருக்குள் வந்து அந்த திடலில்தான் உங்களை எல்லாம் சந்திக்க விரும்பினேன். ஆனால், எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. இங்கு சந்திக்கத்தான் அனுமதி கொடுத்தனர். நான் ஊருக்குள் வருவதற்கு ஏன் தடை என்று எனக்குத் தெரியவில்லை? இப்படித்தான் கொஞ்ச நாட்களுக்கு முன்பாக தவெக-வினர் ஒரு நோட்டீஸ் கொடுத்ததற்கு தடை விதித்தார்கள். அதுவும் ஏன் என்று எனக்கு புரியவில்லை? எனவே உறுதியாக இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.” என்று விஜய் பேசினார்.
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த தவெக தலைவர் விஜய், கட்சிக் கொடி கட்டிய பிரச்சார வாகனத்தில் வந்திருந்தார். பரந்தூர் பகுதியை வந்தடைந்ததும், வாகனத்தின் மேற்பகுதியில் நின்றுகொண்டு, மக்களைப் பார்த்து கை அசைத்தப்படியே நிகழ்விடத்துக்கு விஜய் வந்தடைந்தார். அப்போது விஜய்க்கு தவெக துண்டை கீழே திரண்டிருந்த அவரது கட்சியினர் தூக்கி வீச, அதனை எடுத்து தனது கழுத்தில் மாட்டிக் கொண்டார் விஜய். தொடர்ந்து நூற்றுக்கணக்கான தவெக துண்டுகளை கட்சியினர் விஜய் வாகனத்தின் மீது வீசி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்திருந்த காவல்துறை, ஒரு மணி நேரம் மட்டும் நிகழ்ச்சியை நடத்த அனுமதி கொடுத்திருந்தது. மேலும், பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த தவெக நிர்வாகிகளைத் தவிர மற்றவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று தவகெ தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. விஜய்யின் வருகையை ஒட்டி பரந்தூர் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக இன்று காலை திருவான்மியூரில் இருந்து பரந்தூர் வந்த விஜய்க்கு வழிநெடுகிலும் தவெக-வினரும், அவரது ரசிகர்களும் வரவேற்பு அளித்தனர். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியைத் தொடங்கியபின், பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை களத்தில் சந்தித்ததால், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.