» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆங்கில புத்தாண்டு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 1, ஜனவரி 2025 11:09:29 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. திருச்செந்தூர் கோவிலில் தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் கோவிலுக்கு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
மேலும் தற்போது மார்கழி மாதம் என்பதால் நெல்லை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பாத யாத்திரையாக வருவது வழக்கம்.இவர்களில் பெரும்பாலானோர்கள் ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் பொங்கலுக்கு முன்பே முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும் என்பதற்காக காவடி எடுத்தும், நீண்ட அலகு குத்தியும் பாத யாத்திரையாக வந்து தரிசனம் செய்து செல்வது வழக்கம். சிலர் தைப்பூசம் வரை பாத யாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.