» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை : திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் வெறிச்செயல்!
புதன் 20, நவம்பர் 2024 12:15:45 PM (IST)
தஞ்சை அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில், இன்று காலை ரமணி வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்தபோது, வகுப்பறையில் புகுந்து வாலிபர் ரமணி கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த ரமணி மயங்கி விழுந்தார். உடனே சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி இறந்தார்.
இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மதனை பிடித்து விசாரித்து வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ரமணி மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்திருக்கிறார். இதற்கிடையில், சின்னமனை பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரது மகனான மதன் (30) ஆசிரியை ரமணியை காதலித்து வந்தாராம்.
இருவருமே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மகன் மதனுக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். ரமணியை மதன் காதலிப்பதை அறிந்து, அவரது வீட்டிற்கு பெண் கேட்டு நேற்று மாலை சென்றுள்ளனர். ஆனால் ரமணிக்கு, மதனை திருமணம் செய்வதில் விருப்பமில்லை என கூறிவிட்டாராம். இதனால் ரமணியின் தந்தை முத்து, பெண் கொடுக்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த மதன், இன்று காலை பள்ளியில் புகுந்து கத்தியால் குத்திக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.