» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழு ஆய்வு!

புதன் 20, நவம்பர் 2024 5:09:16 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை  பொதுக் கணக்குக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (20.11.2024) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுத்தலைவர் கு.செல்வ பெருந்தகை, மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், குழு உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி (போளுர்), கோ.ஐயப்பன் (கடலூர்), S.சந்திரன் (திருத்தணி), எஸ்.சேகர் (பரமத்தி-வேலூர்), தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சார்பு செயலாளர் பால சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், நிதித்துறை, உயர்கல்வித்துறை, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை (தீயணைப்புத் துறை), பள்ளி கல்வித்துறை, மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்களுடன் தணிக்கை பத்திகள் தொடர்பான ஆய்வு நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைங்கிணங்க தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரிந்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற பேரவை நிதிநிலை அறிக்கையில், நிதியானது எல்லா துறைக்கும் எப்படி ஒதுக்கப்படுகிறது, ஒதுக்கீடு செய்யப்படும் நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டங்களில் என்னென்ன தவறுகள் நடந்திருக்கிறது, வீணாகசெலவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை சட்டப்பேரவை பொது கணக்கு குழு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பொதுக் கணக்கு குழுவின் வயது நூறு ஆண்டுகளை கடந்து இருக்கிறது. மிகப்பழமையான நாடாளுமன்றத்தின் அனைத்து குழுக்களுக்கும் தாய்க்குழுவாக பொதுக்கணக்கு குழு தான் இருந்து வருகிறது. மக்களுக்கு தேவைப்படும் நலத்திட்டங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் அதற்கு உறுதுணையாக பொதுகணக்கு குழு செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் ஒதுக்கப்படும் ஒவ்வொரு நிதியினையும் ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் பொது கணக்கு குழு தான் உறுதிசெய்கிறது.

தென் மாவட்டங்களிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கனவு திட்டமான நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு, கடந்த காலங்களில் முறையாக செயல்படுத்தாமல் இருந்தது. தற்போது சிறப்பு பொருளாதார மண்டலத்தை செயல்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் செயல்படுத்த சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் குழு அரசிற்கு பரிந்துரை செய்கிறது. தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் பல்வேறு சாலைகள் மேம்படுத்தவும், வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தினையும், வண்ணாரப்பேட்டையில் தாமிரபரணி ஆற்றில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுவரும் உயர்மட்ட பாலத்தினையும், பாளையங்கோட்டை ஏ.ஆர்.லைனில் அமைந்துள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலக வளாகத்தில் பேரிடர் மீட்பு உபகரணங்களையும், திருநெல்வேலி சந்திப்பு அருகிலுள்ள ம.தி.தா இந்துகல்லூரி மேல்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதியார் படித்த வகுப்பறையினையும், பள்ளியில் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். 

ஆய்வில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் (அம்பாசமுத்திரம் வனக்கோட்டம்) இளையராஜா, துணை காவல் ஆணையர் அனிதா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அம்பிகா ஜெயின், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory