» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

2026 தேர்தலில் திமுக ஆட்சியை இழக்கும்: அண்ணாமலை கருத்து

சனி 13, ஜூலை 2024 3:24:19 PM (IST)

இடைத்தேர்தல் முடிவை முன்னோட்டமாக அமைச்சர்கள் எடுத்துக் கொண்டால், நிச்சயமாக 2026 தேர்தலில் திமுக ஆட்சியை இழக்கும்” என்று அவர் கூறினார்.

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வரட்டும், அதுகுறித்து ஆராய்ந்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகிறேன். நாளை அல்லது நாளை மறுநாள் இதுகுறித்து தீர்க்கமாகப் பேசுகிறேன். 

தமிழகத்தைப் பொறுத்தவரையில், இடைத்தேர்தலின் முடிவுகள் எப்போதும் ஓர் ஆச்சரியம்தான். அது தொடர்ந்து ஆளுங்கட்சியைச் சார்ந்துதான் போகிறது. அதன்பிறகு, நடந்த தேர்தல்களில் முழுமையாக முடிவுகள் மாறியிருக்கிறது. இதை பலமுறை பார்த்திருக்கிறோம். இந்த முறையும் அப்படித்தான் முடிவுகள் வந்திருப்பதாக பார்க்கிறோம் . குறிப்பாக இடைத்தேர்தலில், நிறைய அமைச்சர்கள் ஒவ்வொரு இடத்திலும் சென்று வேலை பார்க்கின்றனர். 

அத்துமீறல்கள், முறைகேடுகள் எல்லாம் இப்போது இடைத்தேர்தல்களில் சர்வசாதாரணமாக சென்று கொண்டிருக்கின்றன. ஈரோடு கிழக்கு தொகுதியைப் போல இந்த தேர்தல் நடக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டோம். ஆனால், பல இடங்களில் சோதனை நடத்தப்பட்ட பிறகுதான் இந்த தேர்தல் நடந்திருக்கிறது. எனவே, முழுமையான முடிவுகள் வந்தபிறகு இதுகுறித்து பேசுகிறேன்.

ஆனால், இடைத்தேர்தலின் முடிவுதான் தமிழக மக்களின் மனநிலை என்று நினைத்தால், அது தவறு. காரணம் இதற்கு முன்பும் அதுபோல இருந்தது இல்லை. இப்போதும் அப்படி இருக்கப்போவதில்லை. இருப்பினும், மக்களின் முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னதான் மாற்றுக்கருத்து வைத்தாலும்கூட, மக்களின் முடிவை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதேநேரத்தில், இந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் அனைவரும் இணைந்து கடுமையாக களப்பணியாற்றினர். முடிவுகள் முழுமையாக வரவில்லை என்றாலும்கூட, வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அரசின் அதிகார பலம், பண பலம், படை பலம் அனைத்தையும் தாண்டி இத்தனை மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். அதுவும் ஒரு சாதனைதான். எனவே, நிச்சயமாக வருகின்ற காலம் மாறும். இடைத்தேர்தல் முடிவுகளை முன்னோட்டமாக அமைச்சர்கள் எடுத்துக் கொண்டால், இதற்குமுன்பு தமிழகத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் பொதுத் தேர்தலில் ஆட்சியை இழந்துள்ளது. எனவே, இந்த தேர்தல் முடிவை முன்னோட்டமாக அமைச்சர்கள் எடுத்துக் கொண்டால், நிச்சயமாக இந்த ஆட்சி 2026 தேர்தலில் ஆட்சியை இழக்கும்” என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory