» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தினை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்
தமிழ்நாட்டில் பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய தொல்லியல் தளங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை உலகத்தமிழர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கண்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிந்துகொள்ளும் வகையில் திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20.12.2025 அன்று திறந்து வைத்தார்.
பொருநை அருங்காட்சியகத்தினை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்திற்கு பொதுமக்கள் எளிதாக சென்று பார்த்து வரும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, பாளை பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், சாராள் தக்கர் கல்லூரி சாலை, ஜோஸ் பள்ளி விலக்கு வழியாக பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இன்று முதல் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
பொருநை அருங்காட்சியகத்தினை பொதுமக்கள், பார்வையாளர்கள் கண்டு களிக்கும் வகையில் குறைந்த நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரியவருக்கு ரூ.20/-மும், சிறியவருக்கு ரூ.10/-மும், மாணவ/மாணவியருக்கு ரூ.5/-மும், வெளிநாட்டு பெரியவர்களுக்கு ரூ.50/-மும், வெளிநாட்டு சிறியவர்களுக்கு ரூ.25/-மும், (5D) தியேட்டர் (ஐந்திணை) ரூ.25/-மும், VR (7D) BOAT SIMULATOR MOVEMENTS ரூ.25/-மும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேமரா எடுத்துச் செல்வதற்கு ரூ.30/-மும், வீடியோ கேரமாக்கு ரூ.100/-மும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும். மாலை 6.00 மணிக்கு மேல் நுழைவுச்சீட்டு வழங்கப்படாது. செவ்வாய்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் விடுமுறை
தமிழர்களின் வீரத்தையும் அறிவையும் வரும் தலைமுறையினர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்து, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
ஆதிச்சநல்லூர் கட்டடத்தில் முதுமக்கள் தாழிகள், தங்க நகைகள், வெண்கலப் பொருட்கள், இரும்பு ஆயுதங்கள், தங்க நெற்றிப் பட்டை, வெண்கல வடிகட்டி, அலங்காரக் கிண்ணங்கள் போன்ற பல்வேறு பொருட்களும், சிவகளை கட்டடத்தில் கருப்பு சிவப்புப் பானைகள், கருப்பு சிவப்புப் பானையோடுகள் ஈமத்தாழிகள், உயர் வெண்கலத்தாலான கலன்கள், இரும்பாலான கருவிகள், படையல் கலன்கள், பலவண்ண மட்கலன்கள், குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் எனப் பல்வேறு வகையான தொல்பொருட்களும், கொற்கை கட்டடத்தில் முற்பட்ட தமிழ் பிராமி எழுத்து அமைந்த பானை ஓடு, சங்கு வளையல்கள், சங்குக் குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், கொற்கைத் துறைமுகம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
துலக்கர்பட்டி அகழாய்வில் கண்டெக்கப்பட்ட வெள்ளி முத்திரையிடப்பட்ட நாணயம், தந்தத்தினால் ஆன பொருட்கள், கண்ணாடி (ஆடி) மணிகள், சுடுமண் மணிகள், சூதுபவளம், அகேட், செவ்வந்தி, பளிங்கு ஆகியவற்றால் செய்யப்பட்ட அரிய கல்மணிகள், பல்வேறு வகையான இரும்புப் பொருட்கள், சுடுமண்ணால் ஆன உருவங்கள் மற்றும் சக்கரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் இங்கு கிடைக்கப் பெற்றுள்ளதையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்த்து கலைகளைக் காணும் திறந்த வெளி அரங்கம், தொல்லியல் மாதிரிகள் மற்றும் உள்ளூர்க் கைவினைப்பொருட்களின் விற்பனையகம், மின்கலத்தால் இயங்கும் வாகனம், பொதுமக்கள் செல்ல எளிதான நடைபாதை, இயற்கையை ரசிக்க ஆங்காங்கே மரங்கள், குறுஞ்செடிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், இளைப்பாற ஆங்காங்கே இருக்கைளும் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிய அறிவியலோடும், இயற்கையோடும் இணைந்து அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாலிபர் படுகொலை: தேசிய பட்டியல் சமூக ஆணைய இயக்குநர் நேரில் விசாரணை!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 8:39:41 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 4:25:54 PM (IST)

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசக்கூடாது: மலேசிய அரசு நிபந்தனை?
செவ்வாய் 23, டிசம்பர் 2025 4:07:36 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

விஜய் காரை மறித்து தூத்துக்குடி தவெக பெண் நிர்வாகி போராட்டம்: பனையூரில் பரபரப்பு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:16:59 PM (IST)

அடுத்த முறையும் திராவிட மாடல் ஆட்சி தொடரும் : கனிமொழி எம்.பி நம்பிக்கை!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:20:19 PM (IST)


.gif)