» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆர்டிஇ சேர்க்கையை புறக்கணிப்போம் : தனியார் பள்ளிகள் அதிரடி அறிவிப்பு

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 5:53:20 PM (IST)

386 கோடி ரூபாய் கல்வி கட்டண பாக்கி கிடைக்கும் வரை வரும் கல்வி ஆண்டிற்கான 2024-2025 இலவச கட்டாய கல்விச் சட்டத்தில் (RTE-25) மாணவர்களை சேர்க்காமல் அனைவரும் புறக்கணிப்பது என்று தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளது. 

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார், தமிழ்நாடு அரசிற்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியள்ளதாவது: "தமிழ்நாட்டில் சுயநிதி அடிப்படையில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு காலம் காலமாக வழங்கி வந்த தொடர் அங்கீகாரம் கூட சுமார் 10,000 பள்ளிகளுக்கு இதுவரை வழங்கவில்லை.

மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளை பல்லாயிரக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டி வாங்கி கோப்புகளை அனுப்பியும், தனியார் பள்ளிகள் இயக்குனர் அலுவலகத்திலேயே வருடக் கணக்கில் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் தனியார் பள்ளிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.

தொடர் அங்கீகாரம் கொடுக்காதது யார் தவறு? நான்கு சான்றுகளை வைத்துக்கொண்டு அங்கீகாரம் வழங்கிய காலமெல்லாம் போய், இன்றைக்கு புதிது புதிதாக சான்றுகளைக் கேட்டும் அங்கீகாரம் தர மறுத்தும் காலம் தாழ்த்தி வருவதால் பள்ளி வாகனங்கள் எப்.சி செய்ய முடியாமல், கடன் வாங்க முடியாமல், வாங்கிய கடனுக்கு வட்டியும் தவணையும் கட்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ளனர்.

எனவே, அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் பழைய பள்ளிகளுக்கு எந்தவித நிர்பந்தமும், நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக மூன்றாண்டு காலங்களுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கிட வேண்டும். அதேபோல், அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தில் (RTE) மாணவர்களை சேர்த்ததில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான கல்விக் கட்டண பாக்கி இதுவரை வழங்கவில்லை.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 2021-2022ஆம் கல்வி ஆண்டுக்கான ஆர்.டி.இ கல்வி கட்டண பாக்கி 386 கோடி ரூபாய் வழங்குவதாக அரசாணை வெளியிட்டும் இதுவரை வழங்கவில்லை. கல்வியாண்டின் கடைசி நாட்கள் வந்த பின்னும், இதுவரை கல்வி கட்டண பாக்கி தராததால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாத சம்பளம் தர முடியாமல் பள்ளி நிர்வாகிகள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.

பள்ளிகளின் வங்கிக் கணக்கு எண் மாறவில்லை. வங்கி மாறவில்லை, ஐஎஸ்எப்சி கோடு மாறவில்லை. பல ஆண்டுகளாக தரக்கூடிய அதே வங்கிக் கணக்கு எண்ணில் பணத்தை கொடுப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது? எனவே, அரசு மற்றும் அதிகாரிகள் மிகவும் கவனக்குறைவாக தனியார் பள்ளிகளை மிகவும் மரியாதைக்குறைவாக நடத்துவதாக கருதுகிறோம்.

தனியார் பள்ளிகளுக்கு உரிய கல்விக் கட்டண பாக்கியை உடனடியாக தர வேண்டும். இல்லையென்றால், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் அனைவரும் புறக்கணிப்பது என்றும், தனியார் பள்ளிகளுக்குரிய கல்வி கட்டண பாக்கி கிடைக்கும் வரை வரும் கல்வி ஆண்டிற்கான 2024-2025 இலவச கட்டாய கல்விச் சட்டத்தில் (RTE-25) மாணவர்களை சேர்க்காமல் அனைவரும் புறக்கணிப்பது என்றும் முடிவு எடுத்து இருக்கிறோம்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory