» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

போதையில் கார் ஓட்டி விபத்து: தூத்துக்குடி மாநகராட்சி சஸ்பெண்ட் அதிகாரி அதிரடி கைது!

வெள்ளி 19, ஜூன் 2026 5:02:07 PM (IST)

மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய வழக்கில், தூத்துக்குடி மாநகராட்சியின் முன்னாள் உதவி ஆணையர் சரவணகுமாரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் அடுத்த மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஹக்கீம் (52). இவர் த.மு.மு.க.வின் முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்தவர். கடந்த ஜூன் 10-ஆம் தேதி இரவு நேரத்தில், ஹக்கீம் தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்று, எதிர்பாராத விதமாக ஹக்கீமின் டூ-வீலர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஹக்கீம் படுகாயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த நபர் கடுமையான மதுபோதையில் இருந்தது அங்கிருந்தவர்களுக்குத் தெரியவந்தது.

இதுகுறித்து விபத்து நடந்த மங்கலம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த சரவணகுமார் (49) என்பது தெரியவந்தது. இவர் தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையராகப் பணியாற்றி, பல்வேறு முறைகேடு புகார்களின் காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்புதான் தமிழக அரசால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்ற தகவல் வெளியானது.

மேலும் இவர், இதற்கு முன்பு தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய காலகட்டத்தில், 'பயோ மைனிங்' குப்பை கிடங்கு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்து, அரசுக்கு சுமார் 9.57 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இவர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காகச் சரவணகுமாரை மங்கலம் போலீசார் கைது செய்தனர். எனினும், கைது செய்யப்பட்ட சரவணகுமாருக்குத் தற்போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குப் பலத்த போலீஸ் காவலுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


மக்கள் கருத்து

BabuJun 20, 2026 - 06:33:14 PM | Posted IP 172.7*****

ivana mathiri atkala dvac yepo arrest panuvangalo vao than ulla poranga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory