» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்

திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)



நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் ஆம்னி பஸ் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்தனர்.

கோவையில் இருந்து குமரி மாவட்டம் களியக்காவிளைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் 22 பயணிகள் இருந்தனர். தூத்துக்குடி மேல வெள்ளமடம் பகுதியை சேர்ந்த மகேஷ்வரன் என்பவர் பஸ்சை ஓட்டினார். நேற்று காலை 6 மணிக்கு நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடம் குமரன்புதூர் விலக்கு பகுதியில் வந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே உள்ள மையத்தடுப்பில் மோதியது. மோதிய வேகத்தில் பஸ்சானது நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்ததோடு, முன் பகுதியும் பலத்த சேதமடைந்தது.

உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆரல்வாய்மொழி போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். 

பின்னர் இந்த விபத்தில் படுகாயமடைந்த பஸ் டிரைவரான மகேஷ்வரன் மற்றும் பஸ்சில் வந்த நடக்காவு பகுதியை சேர்ந்த சேம்ஜி வின்சென்ட் (52), அவரது 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது மகன் லியோன்சன் ஆகியோரை மீட்டு ஆம்புலன்சு மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் 10 பேர் லேசான காயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றுவிட்டு வீடுகளுக்கு சென்றனர். மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory