» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் 1025 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணை

சனி 13, டிசம்பர் 2025 10:33:38 AM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2ஆம் கட்ட திட்டத்தின் கீழ், 1025 மகளிருக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாதரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணியினை துவக்கிவைத்தைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் மாவட்டத்திற்குட்பட்ட மாதரசிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணையினை வழங்கி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில்-

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக மகளிர் விடியல் பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழுனருக்கு அடையாள அட்டை, சுயஉதவிக்குழு கடன், தொழில்முனைவோர் கடன், பெண்களுக்கு சொத்துரிமை, மின்சார ஆட்டோ வாங்க கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களினால் ஏற்பட்ட விளைவுகளால் பணிக்கு செல்லும் மகளிர்கள் அதிகமாக நமது தமிழ்நாட்டில் உள்ளார்கள்.

அதனைத்தொடர்ந்து குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் அங்கீகாரம் கொடுக்கும் வகையிலும், பெண்களை தலைநிமிர்ந்து நடக்க செய்யும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 15.09.2023 அன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை செயல்படுத்தினார்கள். இதன் கீழ் தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரு.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் 1,13,75,492 மகளிர்கள் பயனடைந்துள்ளார்கள். நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,99,682 மகளிர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில் விடுப்பட்ட மகளிருக்கு இரண்டாம் கட்டமாக வழங்க கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற 15.07.2025 முதல் 30.10.2025 வரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 84,761 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி பெறப்படும் புதிய விண்ணப்பங்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன.

தற்போது இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தகுதியுள்ள மாதரசிகளுக்கு இரண்டாம் கட்டமாக மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணியினை துவக்கிவைப்பதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாதரசிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 16,94,339 மகளிர்கள் பயனடைவார்கள். நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 1025 மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும்.

சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்றளவும் பல குடும்பங்களில் குறிப்பாக பொருளாதாரத்தைச் சுமக்கும் முதுகெலும்பாகவும் பெண்கள் இருக்கிறார்கள். பெண் உரிமை, அங்கீகாரத்தை வழங்குதல், பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் பங்களிப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியது இத்திட்டம். இத்திட்டத்தினை கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் - புரட்சிக்கவி பாரதியின் வாக்கு. இவ்வாக்கு இணங்க தமிழ்நாட்டு மாதர்களை இழிவுப்படுத்தும் நிலையை கொளுத்திவிட்டு, மாதர்களை தூக்கிப்பிடிக்கின்ற அரசாக தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களை மகிழ்விப்பதே மன்னனின் கடமையாகும். எனவே பெண்கள் இத்தொகையினை பெற்று, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த குடும்ப தலைவிகளின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ் குமார் (கிள்ளியூர்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராகுல் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கு.சுகிதா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சேக் அப்துல் காதர், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் (பொ) பாண்டியராஜன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், மண்டலத்தலைவர் செல்வகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், வட்டாட்சியர்கள் கந்தசாமி (அகஸ்தீஸ்வரம்), ராஜசேகர் (கிள்ளியூர்), வயோலா பாய் (விளவங்கோடு), மரகதவல்லி (திருவட்டார்), சஜித் (கல்குளம்), பேரூராட்சி தலைவர்கள், தனி வட்டாட்சியர்கள், பூதலிங்கபிள்ளை, இராஜாக்கமங்கலம் ஊராட்சிக்குழு முன்னாள் துணைத்தலைவர் சரவணன், வழக்கறிஞர் சதாசிவம், உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory