» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கல்விக் கடன் வழங்க லஞ்சம்: வங்கி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை - உயா்நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் 18, மார்ச் 2025 9:11:19 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்க லஞ்சம் பெற்ற வங்கி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து உயா்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் உள்ள அரசுடைமை வங்கியில் முதுநிலை மேலாளராகப் பணிபுரிந்தவா் சாமுவேல் ஜெபராஜ். இதே வங்கியில் தற்காலிக பணியாளராகப் பணிபுரிந்தவா் நாராயணன் (63). இந்தப் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் தனது மகள் செவிலியா் படிப்பில் சேர கல்விக் கடன் கேட்டு, கடந்த 2010-ஆம் ஆண்டு விண்ணப்பித்தாா். 

கல்வி கடனுக்கான வரைவு காசோலை வழங்க முதுநிலை மேலாளா் சாமுவேல் ஜெபராஜ் அறிவுறுத்தலின் பேரில், தற்காலிகப் பணியாளா் நாராயணன் லஞ்சம் வாங்கினாா். இருவரையும் சிபிஐ போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் இருவரையும் விடுதலை செய்து 2018-ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து சிபிஐ தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நிலுவையில் இருந்த கால கட்டத்தில் சாமுவேல் ஜெபராஜ் உயிரிழந்து விட்டாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு: அரசு அதிகாரிகள் சிலா் லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் வகையில், ஒரு வழியை அடைத்தாலும், மாற்று வழியை உருவாக்கி விடுகின்றனா். இந்த வழக்கில் சாட்சிகள் முறையாக இருந்தும், லஞ்சம் வாங்கிய வங்கிப் பணியாளா்களை விசாரணை நீதிமன்றம் விடுவித்துள்ளது. எனவே, அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 

இந்த வழக்கில் சாமுவேல் ஜெபராஜ் உயிரிழந்து விட்டாா். 2 -ஆவது நபரான நாராயணனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. ஏற்கெனவே கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்த இரு மாணவா்களுக்கு இந்த அபராதத் தொகையிலிருந்து தலா ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். தனது சொந்த ஆதாயத்துக்காக சில அதிகாரிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனா். 

இது சமுதாயத்துக்கான அச்சுறுத்தலாக உள்ளது. ஏழை மாணவா்களின் சமூக நீதிக்காக மத்திய அரசு கல்விக் கடன் திட்டத்தை அமுல்படுத்தியது. இந்த திட்டத்தில் வங்கி பணியாளா்கள் லஞ்சம் பெறுவது கண்டனத்துக்குரியது. இந்த வழக்கில் லஞ்சம் கொடுக்கவில்லையெனில், மாணவியின் கல்விக் கடன் விண்ணப்பத்தை கிழித்து விடுவதாக சாமுவேல் ஜெபராஜ் மிரட்டியுள்ளாா். 

மேலும், கல்வி கடன் பெறுவதற்கான காசோலையை நாராயணன் வைத்து கொண்டு, மாணவியிடம் லஞ்சம் பெற்றுள்ளாா். எனவே, அவருக்கு பாரபட்சம் காட்ட முடியாது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோா்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாா் என நீதிபதி தெரிவித்தார். 


மக்கள் கருத்து

NAAN THAANMar 19, 2025 - 04:59:43 PM | Posted IP 162.1*****

* நாராயணன் (63) * மனு நிலுவையில் இருந்த கால கட்டத்தில் சாமுவேல் ஜெபராஜ் உயிரிழந்து விட்டாா். நீதித்துறைக்கு இவ்வளவு வேகம் கூடாது ... செத்த பிணத்தை கடற்கரையில் புதைக்க நாடி இரவில் கூடும் நீதியஅரசர்கள் வாழும் புண்ணிய பூமி தான் இது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory