» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பயிற்சி மாணவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம் செய்யக்கூடாது: ஆட்சியர் அறிவுறுத்தல்

புதன் 7, மே 2025 12:32:08 PM (IST)



குமரி மாவட்டம் குழித்துறை அரசு மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழித்துறை அரசு மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (06.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- குழித்துறை அரசு மருத்துவமனையில் மருந்தகம், தடுப்பூசி பிரிவு, பிரசவ முன்கவனிப்பு பிரிவு, ஸ்கேன் பிரிவு, பிரசவ வார்டு, பிரசவ பின் கவனிப்புப் பிரிவு, சீமாங் ஐசியு, இரத்த சேமிப்பு பிரிவு, செவித்திறன் பரிசோதனை மையம் (Audiology Room), மனநலப் பிரிவு, ஓபி உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

புற நோயாளிகள் பிரிவில் நோயாளிகளின் மருந்து பரிந்துரை சீட்டுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்து விவரங்களை நோயாளிகளின் மருத்துவ குறிப்பேட்டிலும் பதிவு செய்ய வேண்டும் எனவும், தடுப்பூசி மருந்து சேமிப்பு குளிர் பதன பெட்டியின் வெப்பநிலை அளவு குறிப்பேட்டில் பதிவு செய்வதோடு, தனியாக அறிவிப்பு பலகை அமைத்து அதில் எழுதி வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மருந்தாளுநர் பயிற்சி மாணவர்கள் நேரடியாக நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம் செய்யக்கூடாது. மருந்தாளுநர்களுக்கு உதவி செய்யலாம். மருந்து வாங்க நோயாளர்கள் காத்திருக்கும் பகுதியில் போதுமான மின் விசிறி வசதிகள் ஏற்படுத்த வேண்டும் எனவும், சர்க்கரை நோயாளிகள் அனைவருக்கும் மாதத்திற்கு ஒரு முறையாவது சர்க்கரை அளவுகள் பரிசோதித்து அவர்களுடைய மருத்துவக் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், பிரசவ பின்கவனிப்புப் பிரிவில் நோயாளர்கள் மற்றும் உடன் வருபவர்களுக்கு போதுமான இருக்கை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தற்போது கதிரியல் பிரிவு மருத்துவர் (Radiologist) வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வருவதாகத் தெரிகிறது. ஆனால், வாரத்தின் எல்லா நாட்களிலும் கதிரியல் பிரிவு மருத்துவர் ஒருவர் மருத்துவமனையில் இருக்க நடவடிக்கை மேற்கொள்வதோடு, மகப்பேறு மருத்துவர்கள், கர்பிணிகளுக்குத் தேவையான மகப்பேறு ஸ்கேன்கள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் யு.எஸ்.ஜி மெஷின் (Ultra Sound Scan Machine) இருக்கும் பகுதியில் உள்ள யு.பி.எஸ் (UPS) உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

பிரசவ பின்கவனிப்புப் பிரிவு படுக்கைகள் அனைத்திலும் தலையணை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பிரசவ அறைக்குத் தேவையான சி டி ஜி மெஷின் (CTG Machine) ஒன்று வாங்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிரசவ பகுதிக்கு வெளியே இருக்கும் இன்வெர்ட்டருக்கு உரிய பாதுகாப்பு கவசம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் எனவும், இரத்த வங்கி பணிகள் நிறைவடையாமல், தரைதளம் அமைக்காமல் இருப்பது குறித்து இணை இயக்குனர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளருக்கு உடனே கடிதம் எழுத துறை அலுவலர்க்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகளிடம் இரத்த தானத்திற்கான கொடையாளர்களைக் கொண்டு வரும்படி கேட்கக் கூடாது. மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனையிலுள்ள இரத்த வங்கிகளிடமிருந்து தேவையான இரத்தம் பெற்றுக் கொள்ள வேண்டும். மருத்துவக் கல்லூரி இரத்த வங்கியில் இருந்து இரத்தம் எடுத்து வர அங்கு வாகன வசதிகளைப் பயன்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து வரும் ரத்த சோகை உள்ள கர்ப்பிணி பெண்கள் மற்றும் இரத்தம் தேவைப்படும் கர்ப்பிணிகள் குறித்தத் தகவல்களை முன்கூட்டியே பெற்று அவர்களுக்குத் தேவையான இரத்தம் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை ஒருங்கிணைக்க ஒரு Whatsapp குழு உருவாக்க நடவடிக்கை எடுக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் பிரசவ பின் கவனிப்பு பிரிவில் உள்ள ஒவ்வொரு படுக்கைக்கும் இடையே தடுப்புகள் அமைப்பதோடு, நோயாளிகளின் உடன் இருப்பவர்களுக்கும் படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இப்பணிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10,00,000/- பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. செவிலியர் பயிற்சி மாணவர்களை மூன்று ஷிப்ட்களிலும் வந்து பயிற்சி பெற வேண்டும். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பணிபுரியும் ஆடியாலஜிஸ்ட் வாரத்திற்கு மூன்று நாட்கள் இங்கு வந்து, பச்சிளம் குழந்தைகளுக்குச் செவித்திறன் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென துறை அலுவலர்களிடம் கேட்டுக்கொள்ப்பட்டது என தெரிவித்தார். ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பிரபாகரன், மருத்துவர்கள், செவிலியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory