» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பாரதிதாசன் பிறந்தநாள் விழா போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்

செவ்வாய் 6, மே 2025 4:10:43 PM (IST)



பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சுற்றுலாத்துறை, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்ந நாள் நிறைவுநாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்துகொண்டு, அரசு அலுவலர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில்- தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 22.04.2025 அன்று சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் 29.04.2025 அன்று முதல் மே 5ம் தேதி வரை தமிழ்வார விழா கொண்டாடப்படும் என்று அறிவித்தார்கள். 

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒரு வார கொண்டாட்ட நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியின் நோக்கம் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் சமூகநீதிகொள்கை, அவர் எழுதிய புரட்சிகர படைப்புகள், தமிழ் உணர்வு உள்ளிட்டவைகளை இன்றைய இளைய தலைமுறையினர், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதேயாகும். 

அதனடிப்படையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கையெழுத்துப்போட்டி, படத்தை அடிப்படையாக கொண்டு கதை சொல்லும் போட்டி, குறிப்பு எழுதுதல் மற்றும் வரைவு எழுதுதல் போட்டி, அறிவியல் தமிழ் மற்றும் கணினித்தமிழ் குறித்த வினாடி வினா போட்டி, தமிழ் இலக்கியம், தமிழ் புதினம் தொடர்பாக கதை சொல்லும் போட்டி, கவிதை வாசிப்பு போட்டி, தமிழ் இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, உதவி இயக்குநர் தமிழ்வளர்ச்சித்துறை (பொ) ரெசினாள்மேரி, உசூர் மேலாளர் சுப்பிரமணியம், மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா, இணை இயக்குநர் (வேளாண்மை) ஜெங்கின் பிரபாகர், வட்டாட்சியர்கள் கோலப்பன் (தோவாளை), தனித்துணை வட்டாட்சியர் மணிகண்டன், அரசு அலுவலர்கள், தமிழ் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டர்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory