» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா; அலறியடித்து ஓடிய பொதுமக்கள்: நாகர்கோவிலில் பரபரப்பு
புதன் 12, மார்ச் 2025 8:23:12 PM (IST)

நாகர்கோவிலில் குடியிருப்பு பகுதியில் மிளா புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் வன விலங்குகள் அடிக்கடி புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இவற்றை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினாலும், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக அவை தொடர்ந்து குடியிருப்பு களுக்குள் வருவது தொடர் கதையாக உள்ளது.
இப்படி வரும் விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் மட்டு மின்றி சில நேரங்களில் மனிதர்களையும் பதம் பார்த்து விடுகிறது. இதில் சில நேரங்களில் உயிரிழப்பு களும் ஏற்பட்டு வருகின்றன. இது போன்ற பயமுறுத்தும் சம்பவம் நாகர்கோவில் பள்ளி விளையில் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் பள்ளி விளை குடோனின் எதிர் புறம் உள்ளது பால்பண்ணை தெரு. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் இன்று காலை வழக்கம் போல் தங்கள் பணிகளுக்காக அங்கும் இங்கும் அலைந்த போது அவர்களுக்கு போட்டியாக காட்டு மிளா அங்கு வந்தது. அதனை பார்த்து பொது மக்கள் அதிர்ச்சி அடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர்.
காட்டில் ஜாலியாக திரிந்த மிளா, இங்கு மக்களை கண்டதும் மிரள தொடங்கியது. ஆபத்து என கருதி அந்த மிளா சாலையில் அங்கும் இங்குமாக ஓடியது. இதற்கிடையில் மிளாவின் நடவடிக்கையை கண்டு, பயந்து போன மக்கள் பாது காப்பான இடத்தை தேடி அலைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் ஓடிய மிளா அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடிக்கு செல்லும் வழியில் படிக்கட்டில் ஏறி நின்றது. இதனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். அந்த வீட்டின் குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது மழையும் பெய்ததால் மிளா இடத்தை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்தது.
இதற்கிடையில் மிளா ஊருக்குள் புகுந்தது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதில் சற்று தாமதம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் மிளாவை பார்த்து அச்சத்தில் இருந்த னர். தொடர்ந்து சம்பவ இடம் வந்த வனத்துறையினர் மிளாவை பிடிக்க நட வடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் வந்து மிளாவை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். மிளா நின்ற வீட்டின் மாடிக்குச் சென்று அங்கிருந்து கயிற்றை வீசி மிளாவை பிடிக்க முயன்றனர். வீசப்பட்ட கயிறு மிளாவின் கழுத்தில் விழுந்தாலும், அதனை லாவகமாக மிளா கழற்றி விட்டுவிட்டது. இதனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.
இதற்கிடையில் மிளாவும் அங்கிருந்து நகர்ந்து சாலைக்கு வந்தது. அங்கு திரண்டிருந்த மக்களை பார்த்து அது ஓட்டம் எடுக்க, தங்களை முட்டி தாக்கி விடுமோ என்ற பயத்தில் மக்களும் அலறியடித்து ஓட அந்த பகுதி பதட்டத்திற்குள்ளானது. சாலையில் ஓடிய மிளா, அங்குள்ள மத்திய அரிசி கிட்டங்கியின் முன்பு சென்று ஓய்வெடுத்தது. அதனை பயன்படுத்தி தீய ணைப்பு வீரர்கள் வலையை வீசி மிளாவை மடக்கி பிடிக்க முயன்றனர்.
ஆனால் அவர்களது வலையில் சிக்காமல் மிளா போக்கு காட்டியது.இருப்பினும் முயற்சியை கைவிடாத தீயணைப்பு வீரர்கள், சுற்றி வளைத்து வலைக்குள் மிளாவை சிக்க வைத்தனர். பின்னர் அதனை வனத்துறை வசம் ஒப்படைத்தனர். அவர்கள் வனப்பகுதிக்கு கொண்டு சென்று மிளாவை விட்டனர். இந்த மிளா ஆலம்பாறை மலைப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. சுமார் 3 மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்திய மிளா பிடிபட்டதும் அந்தப் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
குமரி மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் மிளாக்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தோட்ட பயிர்களை மிளா தொடர்ந்து சேதப்ப டுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பொற்றையடி, தக்கலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் தோட்ட பயிர்களை மிளா சேதப்படுத்தி வருகிறது. மிளாவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி களும், பொதுமக்களும் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 12, மார்ச் 2025 4:56:48 PM (IST)

இரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு!
புதன் 12, மார்ச் 2025 3:38:27 PM (IST)

பைக்குகள் மோதி விபத்து: ஜவுளிகடை உரிமையாளர் சாவு
செவ்வாய் 11, மார்ச் 2025 7:57:26 PM (IST)

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
செவ்வாய் 11, மார்ச் 2025 7:54:35 PM (IST)

வாகனங்களை சேதப்படுத்தி, வேன் டிரைவருக்கு அரிவாள் வெட்டு: மர்ம கும்பல் வெறிச்செயல்!
செவ்வாய் 11, மார்ச் 2025 7:44:33 PM (IST)

கன்னியாகுமரியில் விமான நிலையம் : பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை
செவ்வாய் 11, மார்ச் 2025 5:49:51 PM (IST)
