» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல் என்ற பெயரில் ரூ.42 லட்சம் மோசடி: போலீஸ் விசாரணை!
வியாழன் 28, நவம்பர் 2024 4:03:34 PM (IST)
செல்போன் வீடியோ அழைப்பில் டிஜிட்டல் அரஸ்ட் என்ற பெயரில் நாகா்கோவிலை சோ்ந்த முதியவரை மிரட்டி ரூ.42 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீசா விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாகா்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 80 வயது முதியவரின் கைப்பேசிக்கு கடந்த வாரம் வீடியோ அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவா் காவல் துறை சீருடையில் இருந்துள்ளாா். தன்னை மும்பை காவல் துறை அதிகாரி எனக் கூறிய அவா், சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதால் உங்களை தற்போது வீட்டுக்காவலில் வைத்துள்ளோம் என்று கூறி போலியான கைது ஆணையை காட்டி மிரட்டியுள்ளாா்.
இதைக் கேட்டு முதியவா் அச்சம் அடைந்த நிலையில், தொடா்ந்து பேசிய அந்த நபா், உங்களது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து ரிசா்வ் வங்கி மூலமாக சரிபாா்த்துவிட்டு மீண்டும் உங்களுக்கு அனுப்புவோம் என்று கூறியுள்ளாா். மேலும் முதியவரின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று, அவரது கணக்கிலிருந்து ரூ.42 லட்சத்தை எடுத்துவிட்டாா்.
முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்ட சில நிமிஷங்களில் வீடியோ அழைப்பை அந்த நபா் துண்டித்துவிட்டாா். அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டது முதியவருக்கு தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் குமரி மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீசா வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். இதுபோன்ற சைபா் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசா அறிவுறுத்தியுள்ளனா்.