» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ரேஷன் கடைகளில் 41 பணியிடங்களுக்கு நேர்காணல்: 5,989 பேர் விண்ணப்பம்!
செவ்வாய் 26, நவம்பர் 2024 8:35:16 AM (IST)
குமரியில் ரேஷன் கடைகளில் 41 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 5,989 பேரிடம் நேர்காணல் தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் 583 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் 35 விற்பனையாளர்கள் மற்றும் 6 கட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விற்பனையாளர் பதவிக்கு கல்வி தகுதி பிளஸ்-2 ஆகும்.
இவர்களுக்கு முதல் ஓராண்டுக்கு ரூ.6,250 ஊதியம் வழங்கப்படும். அதன் பிறகு ரூ.8,600 முதல் ரூ.29 ஆயிரம் வரை வழங்கப்படும். கட்டுனருக்கு கல்வி தகுதி 10-ம் வகுப்பு ஆகும். அவர்களுக்கு முதல் ஓராண்டுக்கு ரூ.5,500-ம், அதன் பிறகு ரூ.7,800 முதல் ரூ.26 ஆயிரம் வரை வழங்கப்படும்.
இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த வகையில் மொத்தம் 41 பணியிடங்களுக்கு 5 ஆயிரத்து 989 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதைத் தொடர்ந்து விண்ணப்பதார்களுக்கு நேர்காணலுக்கான கடிதம் அனுப்பப்பட்டது.
அதன்படி நேர்காணல் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க காலையில் 500 பேருக்கும், மாலையில் 500 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காலையில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்பதற்காக 500 பேர் வந்திருந்தனர்.
முதலில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகு நேர்காணல் நடந்தது. ரேஷன் கடையில் விற்பனையாளர் பதவிக்கான கல்வி தகுதி பிளஸ்-2 என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் பட்டதாரிகளும், என்ஜினீயர்களும் விண்ணப்பித்து நேர்முக தேர்வுக்கு வந்திருந்தனர். இதே போல கட்டுனருக்கான நேர்காணலுக்கும் பட்டதாரி பெண்கள் வந்திருந்தனர். நேர்காணலானது வருகிற 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது.