» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசியலமைப்பு நாள் விழிப்புணர்வு பேரணி: உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) துவக்கி வைத்தார்!
செவ்வாய் 26, நவம்பர் 2024 3:16:00 PM (IST)
குமரி மாவட்டத்தில் 75வது அரசியலமைப்பு நாள் விழிப்புணர்வு பேரணியை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) ஜோதிமணி கொடியசைந்து துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (26.11.2024) 75வது அரசியலமைப்பு விழிப்புணர்வு பேரணியை மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், முன்னிலையில் கொடியசைந்து துவக்கி வைத்தார்.
நம் இந்தியா நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1949ம் ஆண்டு நவம்பர் 26ம்தேதி நம்முடைய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நம்முடைய அரசியலமைப்பு சட்டம் பல்வேறு நெருக்கடிகளுக்கும், இன்னல்களுக்கும் மத்தில் 75ம் ஆண்டு காலம் பயணித்து, நாட்டின் ஒருமைப்பாட்டையும் கூட்டாட்சி கட்டமைப்பையும் எல்லா தருணங்களிலும் அப்படியே தக்க வைத்திருக்கிறது.
மேலும் அரசியலமைப்பில் உள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை பற்றி அனைத்து தரப்பட்ட மக்களும் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையிலும், இது நாள் வரை தேசம் கடந்து வந்த பாதைகள் குறித்தும், இந்தியாவின் பலதரப்பட்ட கட்டமைப்புகளை அறிந்து கொள்ளும் வகையிலும், நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நம் முன்னோர்களை நினைவு கூறும் வகையிலும் விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், சார்பு நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதயசூரியா, மாவட்ட நீதிபதி (ஓய்வு) ஜாண் ஆர்.டி.சந்தோஷம், துறை அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.