» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சுகபிரசவ குழந்தைகளுக்கு தான் அறிவு அதிகம் இருக்கும் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேச்சு!
சனி 23, நவம்பர் 2024 4:47:25 PM (IST)
"சுகபிரசவ குழந்தைகளுக்கு தான் அறிவு அதிகம் இருக்கும் என்பதை அனைவரும் ஒத்துக் கொள்ள வேண்டும்" என சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார்.
கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம், வெள்ளச்சந்தை ஊராட்சிக்குட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (23.11.2024) நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்து கொண்டு, பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, அக்கோரிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, பேசுகையில் :-
தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க உள்ளாட்சி தினமான 01.11.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டத்தினை இன்று (23.011.2024) அந்தந்த ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தின் நோக்கம் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே எடுத்து கூறுவதேயாகும். அதனடிப்படையில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.
உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் செயலாற்றி வருகின்றார்கள். அரசு பல திட்ட செயல்படுத்தி வருகிறது. தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அனைத்து அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கிட்டத்தட்ட சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து குழந்தைகளுக்கும் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது .காலை உணவு வழங்குவதால் குழந்தைகள் சீக்கிரம் பள்ளிக்கு வருவதுடன் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறது. இதன் மூலமாக குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கிறது.
தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்கள் நல்ல உணவு சாப்பிட்டால் தான் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும். பல்வேறு காரணங்களால் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவாக பிறக்கிறார்கள். அதை இரண்டு வயதுக்குள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்க கூடிய சூழ்நிலை ஏற்படும்.
கர்ப்பிணி பெண்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று மாதந்தோறும் பரி சோதனை செய்து கொள்ள வேண்டும். எவ்வளவு ரத்தம் உள்ளது. இரத்த அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதை பரிசோதித்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகளுக்கு இந்த இரண்டும் மிக முக்கியமானதாகும். கர்ப்பிணிகளுக்கு ஹீமோகுளோபின் 13 முதல் 14 இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு இரத்த அளவு சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். ரத்த கொதிப்பையும் சரி பார்த்துக் கொள்ளவும்.
இரண்டும் சரியாக இருந்தால் சுகப்பிரசவம் கிடைக்கும். சுகபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் தான் நல்ல வளர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். பிற்காலத்தில் வரக்கூடிய எந்த சவால்களையும் சமாளிக்க கூடிய திறமை சுகபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இருக்கும். வீட்டு வேலைகள் சரியாக செய்வதுடன் நல்ல உடற்பயிற்சி செய்து இருந்தால் சுகப்பிரசவம் ஆகும். அறுவை சிகிச்சை மூலமாக பிறக்கும் குழந்தைகளை பெற்றோர் நம்பிக்கை வைத்து ஆரோக்கியமாக வளர்த்து வளர்த்தால் அவர்களும் நல்ல அளவுக்கு வந்து விடுவார்கள். ஆனாலும் சுகபிரசவ குழந்தைகளுக்கு தான் அறிவு அதிகம் இருக்கும் என்பதை அனைவரும் ஒத்துக் கொள்ள வேண்டும் .
பெண் குழந்தைகளை 21 வயதில் திருமணம் செய்து கொடுத்து வருகிறார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொடுத்து வருகிறார்கள். குடும்ப சூழ்நிலை நன்றாக இருந்தால் பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். பெண்கள் அவர்களது சொந்த காலில் நிற்க வேண்டும். பெண்களை தைரியத்துடனும் திறமையுடன் வளர்த்து திருமணம் செய்து கொடுக்க வேண்டும். ஆண்கள் மட்டும் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றும் சூழல் மாறிவிட்டது.
இரண்டு பேரும் வேலைக்கு செல்லும் போது நல்ல குடும்பத்தையும், நல்ல குழந்தைகளையும் உருவாக்க முடியும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்க முடியும். பெண்களை வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கக் கூடாது. பெண்கள் விருப்பப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக திருமணம் செய்து வையுங்கள். கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்காதீர்கள். அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால் அவர்களின் விருப்பப்படி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்.
ஆண்களுக்கு எந்த அளவு சுதந்திரம் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு பெண் குழந்தைகளுக்கும் சுதந்திரம் கொடுக்க வேண்டும். சமூகங்கள் மாறி வருகிறது. பெண்கள் தனியாக சொந்த காலில் நிற்க வேண்டும். பெற்றோர் தங்களது பெண் குழந்தைகள் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதியோர் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு சொத்துக்களை எழுதிக் கொடுக்கும் போது நன்கு யோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். ஏராளமான முதியவர்கள் தங்களது சொத்துக்களை கொடுத்துவிட்டு தங்களை கவனிக்கவில்லை என்று புகார் கூறி வருகிறார்கள். சொத்துகள் கொடுத்த பிறகு பெண் குழந்தைகள் கூட பெற்றோரை கைவிடும் சூழல் ஏற்படுகிறது.
சொத்தை கொடுத்த பிறகு முதியவர்கள் ஏராளமானோர் என்னிடம் வந்து மனு கொடுக்கும் சூழல் தற்பொழுது இருந்து வருகிறது. போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும். இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர். சாக்லேட் வடிவிலான போதை பொருட்கள் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் சூழல் ஏற்படுகிறது. இதனால் எதிலும் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது.
போதை பழக்கத்திற்கு இளைஞர்கள் ஆளாக கூடாது. போதைப் பொருட்கள் விற்பனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களை கவுன்சிலிங் மூலமாக சரி செய்ய முடியும்.அரசு பள்ளிகள் மட்டும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.
அதனைத்தொடர்ந்து கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த 20 தூய்மை தூய்மை காவலர்களுக்கும், சிறப்பாக பணிபுரிந்த ஒரு குடிநீர் உடனாளருக்கும், ஒரு தூய்மை பணியாளருக்கும், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் 5 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்ததோடு, பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்துறை பணி விளக்க அரங்கினை பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து வெள்ளச்சந்தை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் சிறப்பு முகாமினை பார்வையிட்டார்.
கூட்டத்தில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, இணை இயக்குநர் (வேளாண்மை (பொ), மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெங்கின் பிரபாகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கலாவதி, மண்டல துணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.இராதாகிருஷ்ணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பத்ஹூ முகம்மது நசீர், துணை இயக்குநர்கள் ஷீலா ஜாண் (தோட்டகலைத்துறை), கீதா (வேளாண்மை விற்பனை), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கோட்ட செயற்பொறியாளர் பொறி.கோபாலகிருஷ்ணன், உட்பட துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.