» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மாணவிகள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் துணிச்சலாக கூறலாம்: டிஎஸ்பி லலித்குமார் பேச்சு
புதன் 20, நவம்பர் 2024 8:17:13 PM (IST)
மாணவிகள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் துணிச்சலாக கூறலாம் என்றுஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்த ‘போலீஸ் அக்கா’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டிஎஸ்பி லலித்குமார் பேசினார்.
பள்ளி- கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், வெளியில் சொல்லத் தயங்கும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் தமிழகம் முழுவதும் ‘போலீஸ் அக்கா' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டு, 113 பெண் போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நேற்று நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் டிஎஸ்பி லலித்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்தான் ‘போலீஸ் அக்கா’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசாரிபள்ளம் காவல் நிலையப் பகுதிக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் நீங்கள், உங்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஏற்பட்டாலோ, வெளியில் சொல்லத் தயங்கும் பிரச்சினைகள், கல்லூரியில் கேலி- கிண்டல் போன்ற பிரச்சினைகள், குடும்பத்தில் உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என எந்த பிரச்சினையாக இருந்தாலும் கூறலாம். அவர் உங்களுடைய தோழியாக நடந்து கொள்வார். நீங்கள் சொல்லும் பிரச்சினைகள், புகார்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
உங்களது பிரச்சினைகளுக்கு போலீஸ் ரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும், குடும்ப ரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்வார். அதனால் மாணவிகளாகிய நீங்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் துணிச்சலாக சொல்லுங்கள். மேலும் மாணவிகள் ஒவ்வொருவரும் உங்களது செல்போன்களில் ‘காவல் உதவி’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சுரேஷ்பாலன், நேசமணிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை, ஆசாரிபள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பக்டர் ஜெசிமேனகா மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போலீஸ் அக்கா திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயா மாணவிகளிடம் அறிமுகம் செய்யப்பட்டார்.
NAAN THAANNov 21, 2024 - 11:11:55 AM | Posted IP 172.7*****