» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: இளைஞர் கைது - ரூ.20 லட்சம் பறிமுதல்!
சனி 16, நவம்பர் 2024 12:17:47 PM (IST)
தக்கலை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த இளைஞரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து ரூ.20 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள முளகுமூடு அடக்காச்சிவிளையை சேர்ந்தவர் சுவீட்லின் ஞானரெஜி (47). முளகுமூட்டில் உள்ள ஒரு ரிசார்ட்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது ரிசார்ட்டில் தங்க வந்த கேரள மாநிலம் கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்த சனல் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
தமிழகத்தில் பல அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் தனக்கு நல்ல தொடர்பு உள்ளதால் பலருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாக சனல் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய சுவீட்லின் ஞானரெஜி, தனது மனைவிக்கு அரசு கல்லூரியில் ஆசிரியையாக வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ரூ.60 லட்சம் ஆகும் எனக் கூறிய சனலிடம், முன்பணமாக ரூ.35 லட்சமும், 14 பவுன் தங்க நகைகளையும் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்று பல நாள்களாகியும் மனைவிக்கு வேலை வாங்கி கொடுக்காமல் சனல் காலம் கடத்தி வந்ததால், தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த சுவீட்லின் ஞானரெஜி, இதுகுறித்து கடந்த மாதம் தக்கலை போலீஸில் புகார் செய்தார். தக்கலை இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீஸார், பள்ளியாடி ரயில் நிலையத்திற்கு வந்த சனலை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் ரூ.20 லட்சத்து 5 ஆயிரமும், 43 கிராம் நகைகளும் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், சனலிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.