» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தெற்காசிய போட்டியில் வெற்றிப்பெற்ற வீராங்கனைக்கு ஆட்சியர் பாராட்டு!
வெள்ளி 27, செப்டம்பர் 2024 5:45:11 PM (IST)
தெற்காசிய போட்டியில் வெற்றிப்பெற்ற கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு வீராங்கனைக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பாராட்டு தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அட்யா பட்யா தெற்காசிய போட்டியில் வெற்றிபெற்ற வீராங்கனை ஜோஷிகா இன்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவிக்கையில்- கிளியாந்தட்டு என்ற பெயரில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் விளையாடப்பட்டு வந்த சுறுசுறுப்பான ஒரு விளையாட்டாகும்.
இந்த விளையாட்டு தற்போது அட்யா பட்யா என்ற பெயரில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பல்வேறு போட்டிகளில் வீரர் வீராங்கனைகள் பங்கேற்று வருகிறார்கள். அதனடிப்படையில் கடந்த செப்டம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் பூட்டான் நாட்டில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான அட்யா பட்யா போட்டி நடைபெற்றது. இந்திய அணியில் பங்குபெற்ற கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியை சேர்ந்த ஜோஷிகா தேர்வு பெற்று கலந்து கொண்டார்கள்.
ஏழு நாடுகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருவதுடன், அஞ்சல் துறை, வணிகவரித்துறை, வருமான வரித்துறை உட்பட பல்வேறு இந்திய அரசு பணிகளிலும் அட்யா பட்யா விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய அணியில் இடம் பெற்று வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்த வீராங்கனை செல்வி.ஜோஷிகா அவர்களை பாராட்டுவதோடு, மென்மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராஜேஷ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா ஜி இம்மானுவேல், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாரதி, உதவி இயக்குநர் திறன்மேம்பாடு உதவி இயக்குநர் (திறன்மேம்பாடு) லட்சுமிகாந்தன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்ட அட்யா பட்யா விளையாட்டு கழக கௌரவ தலைவர் அர்னால்டு அரசு, செயலாளர் ஜெயராஜ், தலைவர் அசோக்குமார், பயிற்சியாளர் ராம நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.