» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கழிவு மீன் ஆலைகளை இழுத்து மூடக் கோரி 9ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : போராட்டக்குழு அறிவிப்பு

திங்கள் 8, ஜூலை 2024 8:24:43 AM (IST)

பொட்டலூரணிப் பகுதியைச் சுற்றியுள்ள, சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும் கழிவு மீன் நிறுவனங்களை இழுத்து மூடக் கோரியும் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறக்கோரியும் தூத்துக்குடியில் 9ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பொட்டலூரணி கழிவுமீன் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம். எல்லைநாயக்கன்பட்டி வருவாய்க் கிராமம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது பொட்டலூரணி கிராமம். இவ்வூரைச் சுற்றியுள்ள மானாவரி விவசாய நிலத்தில், செட்டிமல்லன்பட்டி வருவாய்க் கிராமத்திற்குட்பட்ட பொட்டலூரணி விலக்குப் பகுதியில் என்.பி.எம் என்ற கழிவு மீன் நிறுவனமும், வடக்குக் காரசேரி வருவாய்க் கிராமத்திற்கு உட்பட்ட, பொட்டலூரணி விவசாய நிலப் பகுதியில் மார்க்ஸ்மென், ஜெனிபா இண்டியா என்ற இரு கழிவு மீன் நிறுவனங்களும் இயங்கிவருகின்றன.

இந்த மூன்று நிறுவனங்களும் கழிவு மீன்களை மூலப்பொருளாகக் கொண்டு ஏதேதோ தயாரிப்பதாகக் கூறிவருகின்றன. இந்தக்கழிவு மீன் நிறுவனங்கள் வெளியேற்றும் நச்சுப்புகை, கழிவு நீர் போன்றவற்றால் மக்களின் சுகாதாரத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்தக்கழிவு மீன் நிறுவனங்களுக்கு பெயர்ப்பலகைகூட கிடையாது. பெயர்ப்பலகைகூட இல்லாத இந்தக்கழிவு மீன் நிறுவனங்களுக்கு, தொடர்புடைய அனைத்துத் துறைகளும் அனுமதி அளித்துள்ளன. இந்தக் கழிவு மீன் நிறுவனங்கள் வெளியேற்றும் நச்சுப் புகையினால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக வீடுகளில் குடியிருக்க முடியவில்லை.

நச்சுப் புகை காரணமாக கண் எரிச்சல், மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம், நுரையீரல் பாதிப்பு, இதய பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. விவசாய நிலங்களில் நின்று விவசாயிகளால் வேலை செய்ய முடியவில்லை; விவசாய வேலைக்கு ஆள்கள் வரமறுக்கின்றனர். நச்சுக்காற்றினைத் தேக்கிவைத்து இரவு 11.30 மணிக்கு மேல் திறந்து விடுகின்றனர். ஆழ்ந்த உறக்கத்தின்போது மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. குறிப்பாகக் குழந்தைகளும் முதியவர்களும் மிகவும் பாதிப்படைகின்றனர். இந்த நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கியது முதல் ஊர் மக்களின் இறப்பு எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. மயில், காகம், முயல் போன்ற உயிரினங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.

இந்த நிறுவனங்களின் கழிவு நீரை டேங்கர் லாரிகளில் கொண்டுவந்து ஊர்க் குளங்களிலும் ஓடைகளிலும் விவசாய நிலங்களிலும் இரவுடிகளின் துணையோடு நடு இரவில் ஊற்றிவிடுகின்றனர். கழிவுமீன் நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை வாருகால் வழியாக அவ்வப்போது அப்பகுதியிலுள்ள குளத்திற்குள் தேங்கும்படி விட்டுவிடுகின்றனர். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது; விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது; சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. 

அந்த நீரைக் குடிக்கும் கால்நடைகள் இறந்துபோய்விடுகின்றன. பொதுமக்களின் புகார் நிலுவையில் உள்ள நிலையில் மேற்படி நிறுவனங்கள் நாளுக்கு நாள் விரிவாக்கம் செய்ய அரசு அலுவலர்கள் அனுமதிக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்புடைய அரசு அதிகாரிகளுக்கு பொட்டலூரணி ஊர் பொதுமக்கள் சார்பாக புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே 2024 நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பு செய்யப்போவதாக பொட்டலூரணி ஊர்ப் பொதுமக்கள் முடிவுசெய்து, தேர்தல் அலுவலரான தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் அனைவருக்கும் முறையாகக் கடிதம் அனுப்பப்பட்டது. 

தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் எனத் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டதை அறிவித்த மக்களே எழுத்துவடிவில் பலமுறை அழைத்தும் மாவட்ட ஆட்சியர் இறுதிவரை பேச்சுவார்த்தை நடத்த முன்வரவே இல்லை. இந்நிலையில் தேர்தல் நாளன்று (19.4.2024) அதிகாலையிலேயே அதிகாரக் கூட்டத்தினர் விதிமீறல்களைத் தொடங்கினர். வழக்கத்திற்கு மாறாக வாக்குச்சாவடியின் எல்லைகோட்டைத் தள்ளிப் போட்டனர்; வாக்குச் சாவடிக்குள் குற்ற வழக்குப் பின்புலமுடைய அந்நியரைத் திட்டமிட்டு அமரவைத்தனர். 

நண்பகல் வரை பொதுமக்கள் வாக்களிக்க முன்வரவில்லை. எனவே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகிய இருவரும் பொட்டலூரணி கிராம மக்களோடு பேசுவதற்காக வருகிறார்கள் என்று தி.மு.க ஒன்றியச் செயலாளர் காலை முதலே பேசிவந்தார். அதற்கான சூழல் இங்கு இல்லை; அவர்கள் வரவேண்டாம் என்று பொது மக்கள் தெரிவித்தனர். ஆனால் அதனை மீறி அமைச்சர் வந்தார். காரை விட்டு அமைச்சர் இறங்கவிடாமல் மக்கள் முழக்கமிட்டனர். பலமுறை புகார் அளித்தும் இதுவரை மக்களைச் சந்திக்காதவர்கள் அதிகாரம் இல்லாத தேர்தல் நேரத்தில் ஊருக்குள் இறங்க வேண்டாம் என்று மக்கள் முழக்கமிட்டனர். 

இதனைத் தொடர்ந்து அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் வண்டியை விட்டு இறங்காமலேயே திரும்பிச் சென்று விட்டனர். அமைச்சர் சென்ற ஒருமணி நேரத்திற்குள் பொதுமக்களைத் தாக்கும் நோக்கத்தில் கொலைக்கருவிகளுடன் 40க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் வந்து இறங்கினர். பொதுமக்களின் வற்புறுத்தலைத் தொடர்ந்து வழி தவறி நின்ற குற்றவாளிகளில் சிலரை மட்டும் பிடித்துவந்து, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் காவல்துறையினர் பொதுமக்கள் முன்பாக நிறுத்தினர். கூலிப்படையை அனுப்பியவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

வாக்குச் சாவடிக்குள் அமர வைக்கப்பட்டிருந்த இரவுடிமீது எந்தப் புகாரும் அளிக்காத கிராம நிர்வாக அலுவலர் விஜயமூர்த்தி, பொதுமக்கள் மீது மட்டும் இரண்டு பொய்ப் புகார்களை அளித்துள்ளார். அதனடிப்படையில் பொதுமக்கள்மீது இரண்டு பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, பொட்டலூரணிப் பகுதியைச் சுற்றியுள்ள மூன்று கழிவுமீன் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அரசு அனுமதியை இரத்து செய்ய வேண்டும். பொதுமக்கள்மீது போடப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெற வேண்டும். உண்மைக் குற்றவாளியை மறைக்கும் நோக்கத்திற்காகப் பொதுமக்கள் மீது பொய்ப்புகார் அளித்த கிராம நிர்வாக அலுவலர் விஜயமூர்த்தி மீது துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள்மீது கூலிப்படையை அனுப்பிய ஆளும்கட்சியின் பின்புலம் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! பொட்டலூரணிப் பகுதி மக்களின் நலன்கருதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை, தூத்துக்குடி. ஏற்பாடு செய்துள்ள தூத்துக்குடி சிதம்பர நகரில் 9ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நாம் அனைவரும் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம் இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ஓட்டு போட்டு ஏமாந்தவன்Jul 8, 2024 - 07:04:28 PM | Posted IP 162.1*****

யாருக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தீர்களோ அவர்களிடம் சொல்லுங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory