» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குரூப் 1 முதல்நிலைத் தேர்விற்கு இலவச பயிற்சி : ஜூன் 10க்குள் பதிவு செய்ய அழைப்பு

வியாழன் 6, ஜூன் 2024 11:15:12 AM (IST)

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு இலவச பயிற்சிக்கு  வருகிற 10ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 

வேலைவாய்ப்பு மற்றும்  பயிற்சித்துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNSURB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20000-ற்கும் மேற்பட்ட மாணவ/மாணவியர்கள்  கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம்,  அதிக அளவிலான மாணவ/மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 1 (TNPSC GROUP I) தேர்விற்கு 90 காலிப்பணியிடங்களுக்கான  அறிவிப்பு 28.03.2024 அன்று  வெளியிடப்பட்டுள்ளது. தொகுதி 1-ற்கான முதல்நிலைத் தேர்விற்கு (TNPSC Group I Prelims) இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் வைத்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00  மணி வரை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த இலவச  பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள்  பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து 10.06.2024-ஆம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும், முதலில் வரும் 100 மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.  

இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டும், SMART BOARD வகுப்புகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக்குறிப்புகள் (Study Material) இலவசமாக வழங்கப்படும். மேலும் வாரந்திர  மாதிரித்தேர்வுகள் தொடர்ச்சியாக  நடைபெறவுள்ளது.

மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான  https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு  மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

Surya Prakash RJun 7, 2024 - 11:06:20 AM | Posted IP 162.1*****

I want to attend the classes

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory