» செய்திகள் - விளையாட்டு » உலகம்

டிரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்தில் திருத்தம் : ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தல்!

திங்கள் 24, நவம்பர் 2025 11:14:09 AM (IST)

உக்ரைன் - ரஷியா போர் நிறுத்ததம் தொடர்பாக டிரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. 

ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. இந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக வரி விதித்தார். ரஷிய அதிபர் புதினை அழைத்து பேசினார். ஆனால் போர் நிறுத்த முயற்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து, போரை நிறுத்தும் அடுத்தகட்ட முயற்சியாக டிரம்ப் 28 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார்.

ஆனால், ரஷியா நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது போல் இந்த அமைதி திட்டம் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்துள்ளார். அதே சமயத்தில், ரஷிய அதிபர் புதின் இதை ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவின் அமைதி திட்டம் குறித்து உக்ரைனுக்கும், சில ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையே நேற்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் பேச்சுவார்த்தை நடந்தது.

அதில், உக்ரைன் பிரதிநிதிகள் குழுவுக்கு அந்நாட்டு அதிபர் அலுவலக உயர் அதிகாரி ஆன்ட்றி யெர்மாக் தலைமை தாங்கினார். ஐரோப்பிய நாடுகள் தரப்பில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர். அமைதி திட்டம் ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதால், அதில் திருத்தம் ெசய்ய வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தன.

அடுத்த கூட்டத்தில், அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ருபியோவுடன் இக்குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதில், அமெரிக்க ராணுவ செயலாளர் டேன் டிரிஸ்கோல், டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோப் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இதுகுறித்து உக்ரைன் அதிபர் அலுவலக உயர் அதிகாரி ஆன்ட்ரி யெர்மாக் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

"இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதுடன், அமைதி திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. அடுத்தபடியாக அமெரிக்க குழுவுடன் பேசுவோம். உக்ரைனுக்கு நீடித்த அமைதியை அளிக்க இணைந்து செயல்படுவோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory